39, 51, 49*... | சர்வதேச கிரிக்கெட்டில் திலக் வர்மா அபார தொடக்கம்!

திலக் வர்மா
திலக் வர்மா
Updated on
1 min read

கயானா: தனது சர்வதேச கிரிக்கெட் கேரியரை அபாரமாக தொடங்கியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா. 39, 51, 49* (நாட்-அவுட்) என தனது முதல் மூன்று சர்வதேச போட்டிகளில் அவர் ரன் குவித்துள்ளார். இதன் மூலம் தனது வருகையை உலக கிரிக்கெட்டுக்கு உரக்க சொல்லியுள்ளார்.

20 வயதான திலக் வர்மா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தற்போது விளையாடி வருகிறார். இது தான் அவர் விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர். இந்திய அணிக்காக பேட்டிங் ஆர்டரில் நான்காவது பேட்ஸ்மேனாக களம் கண்டு விளையாடி வருகிறார். இந்த இடத்தில் ஆடுவது யார் என்ற குழப்பம் இந்திய அணிக்குள் நெடு நாட்களாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் 397 மற்றும் 343 ரன்களை அவர் எடுத்திருந்தார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தை சீனியர் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் திலக் வர்மாவை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

“திலக் வர்மா கிரிக்கெட்டில் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். இதை தான் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் அவர் செய்திருந்தார். அதையே தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தி வருகிறார். அவரது அதீத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் இது. எனது பார்வையில் அவர் நட்சத்திர வீரர்.

களத்தில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக உள்ளார். அதுதான் இந்திய அணிக்காக விளையாடும் போது ஒரு வீரருக்கு தேவை என நான் கருதுகிறேன்” என மூன்றாவது டி20 போட்டிக்கு பின்னர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்தப் போட்டியில் திலக் வர்மா 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்திக் பாண்டியா 18-வது ஓவரின் 5-வது பந்தை சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இருந்தும் திலக் வர்மாவுக்கு அரை சதம் பதிவு செய்யும் வாய்ப்பை பாண்டியா கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in