Published : 09 Aug 2023 07:06 AM
Last Updated : 09 Aug 2023 07:06 AM

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

கோப்புப்படம்

சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் மலேசியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியனான தென் கொரியா ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் பாகிஸ்தான் ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் உள்ளன. ஜப்பான் 2 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சீனா ஒரு புள்ளியுடன் கடைசி இடமும் வகிக்கின்றன. இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது. ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி. மாறாக ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறமுடியும் என்ற நெருக்கடியில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பை பெறுவதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் இருக்காது. மாறாக தோல்வி அடைந்தால் சீனா - ஜப்பான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்தே பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு தெரியவரும்.

சீனா வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு எளிதாகிவிடும். ஏனெனில் ஜப்பான் 2 புள்ளிகளுடனும், சீனா 4 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்யும். இந்த நிலை ஏற்பட்டால் 5 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தாலும் அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிடும்.

ஒருவேளை ஜப்பான், சீனாவை அதிக கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் உருவாகும். பாகிஸ்தான் அணிக்கு மற்றொரு வாய்ப்பும் உள்ளது. அது தென் கொரியா - மலேசியா அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவாகும். இந்த ஆட்டத்தில் மலேசியா அதிக கோல்கள் வித்தியாசத்தில் தென் கொரியாவை வீழ்த்தினால் பாகிஸ்தான் அணிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகக்கூடும். ஜப்பான் - சீனா அணிகள் மோதும் ஆட்டம் மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தலா மூன்று முறை பட்டத்தை வென்றிருந்தாலும், தற்போதைய தரவரிசையின் அடிப்படையில் இந்திய அணி பலமானதாக திகழ்கிறது. உலகத் தரவரிசையில் இந்திய அணி 4-வது இடத்திலும் பாகிஸ்தான் அணி 16-வது இடத்திலும் உள்ளது. ஆனால் உயர்மட்ட அளவிலான போட்டி என்று வரும்போது தரவரிசை முக்கியமல்ல, எந்த அணி அழுத்தத்தை சிறப்பாகக் கையாளுகிறது என்பதை பொறுத்தே வெற்றி அமையக்கூடும்.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் தாக்குதல் ஆட்டம் விளையாடி வருகிறது. பெனால்டி கார்னர்களை கையாள்வதிலும் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் அரை இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக டிபன்ஸை பலப்படுத்துவதில் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும். பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. அதேவேளையில் இந்திய அணி நடப்பு சாம்பியனான தென் கொரியாவை 3-1 என சாய்த்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதில் இந்திய அணி வீரர்கள் முனைப்பு காட்டக்கூடும்.

தென் கொரியா… மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் கொரியா - மலேசியா அணிகள் மோதுகின்றன. மலேசியா ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. மாறாக 5 புள்ளிகளுடன் உள்ள தென் கொரியா வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x