Published : 28 Nov 2017 11:02 AM
Last Updated : 28 Nov 2017 11:02 AM

பிரிஸ்பனில் ஆஸி. அபார வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிஸ்பனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 83, டேவிட் மலான் 56 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித்தின் (141) அபார ஆட்டத்தால் 328 ரன்கள் குவித்தது. 26 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 71.4 ஓவர்களில் 195 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 51, பேர்ஸ்டோவ் 42, மொயின் அலி 40 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஸ் ஹசல்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 34 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்தது. கேமருன் பாங்கிராஃப்ட் 51, டேவிட் வார்னர் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெற்றிக்கு மேற்கொண்டு 56 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் 182 பந்துகளில், 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 82 ரன்களும்,கேமருன் பாங்கிராஃப்ட் 119 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வானார். 2-வது டெஸ்ட் டிசம்பர் 2-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x