Published : 08 Aug 2023 05:10 PM
Last Updated : 08 Aug 2023 05:10 PM

ஆஸ்திரேலிய டி20 அணியின் ‘ஓப்பனர்’ ஆகிறார் ஸ்டீவ் ஸ்மித்! - திடீர் முடிவின் பின்னணி

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடிய ‘ரன் மெஷின்’ ஸ்டீவ் ஸ்மித் இப்போது ஆஸ்திரேலிய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு, புதிய ரோலில் அவர் களமிறங்குகிறார். ஆம்! தொடக்க ஆட்டக்காரராக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குகிறார்.

எப்படி மெக்கல்லம்-பென் ஸ்டோக்ஸ் காம்பினேஷன் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதோ, அதேபோல் ஆஸ்திரேலிய டி20 அணியின் புதிய கேப்டன் மிட்செல் மார்ஷ் தலைமையில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்கத்துடன் ஒரு புதிய சகாப்தம் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டி20 உலகக் கோப்பையில் இவரை விட டிம் டேவிட் பயனுள்ளவர் என்று ஆஸ்திரேலியா கருதியது. ஆனால், இப்போது மனம் மாறிய ஆஸ்திரேலிய தேர்வுக்குழு ஸ்டீவ் ஸ்மித்தை டி20 அணியில் தேர்வு செய்திருப்பதோடு, அவருக்கு டி20 கிரிக்கெட்டின் மிகவும் பொறுப்புள்ள இடமான தொடக்க ஆட்டக்காரர் இடத்தை வழங்கியதும் ஏன் என்ற கேள்வியை எழுப்புவது நியாயமே.

இங்கு ஐபிஎல் போல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பீபிஎல் என்னும் பிக் பாஷ் லீகில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு ஆடும் ஸ்டீவ் ஸ்மித் அடிலெய்ட் ஸ்ட்ரைக்ஸ் அணிக்கு எதிராக 56 பந்துகளில் 101 ரன்களையும் சிட்னி தண்டர் அணிக்கு எதிராக 66 பந்துகளில் 125 ரன்கள் விளாசியும் இரண்டு சதங்களை எடுத்ததன் விளைவாக அவர் மீண்டும் டி20 இடத்தைப் பிடித்ததோடு தொடக்க வீரர் என்ற புதிய ரோலிலும் களமிறங்கி அசத்தப் போகிறார் ஸ்டீவ் ஸ்மித். பிபில் வரலாற்றில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த இந்த 2 சதங்களும் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற சதங்களாகும்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடரில் ஆடச் செல்கிறது ஆஸ்திரேலியா அதற்கான டி20 அணியை நேற்று ஆஸ்திரேலியா அறிவித்தது, அப்போது தலைமை அணித்தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங் பிளேயராக இறங்குவதை உறுதி செய்தார்.

இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எந்த வடிவத்திலும் தொடக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கியதில்லை. மற்றபடி 3ம் நிலையிலிருந்து 9ம் நிலை வரை ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கியிருக்கிறார். பிக்பாஷ் லீகில் ஸ்டீவ் ஸ்மித் காட்டிய டி20 திறமைகள் சர்வதேச கிரிக்கெட்டிலும் மிளிர வாய்ப்பளிக்கப்பட்டதாக ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருடன் ஓப்பனிங்கில் இறங்குவதை ஆவலுடன் இந்த முயற்சி எதிர்நோக்குகிறது. இந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஸ்டீவ் ஸ்மித்துடன் தொடக்கத்தில் களமிறங்குவோர் பட்டியலில் ட்ராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 30ம் தேதி டர்பனில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x