சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்!

வெட்டோரி | கோப்புப்படம்
வெட்டோரி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2013 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அங்கம் வகித்து வருகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. சன் குழும நிறுவனம் தான் இந்த அணியின் உரிமையாளர். கடந்த 2016-ல் இந்த அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களாக லீக் சுற்றோடு நடையை கட்டி வருகிறது. அணிக்குள் பல மாற்றங்கள் மேற்கொண்டும் ஏனோ அது பலன் அளிக்கவில்லை. இந்தச் சூழலில் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிரையன் லாராவுக்கு மாற்றாக அந்தப் பொறுப்பில் முன்னாள் நியூஸிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

44 வயதான வெட்டோரி, நியூஸிலாந்து அணிக்காக 442 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர், மொத்தமாக 705 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2008 முதல் 2012 வரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

பயிற்சியாளர் வெட்டோரி: 2014 முதல் 2018 வரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக வெட்டோரி செயல்பட்டுள்ளார். 2019-ல் வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். சில டி20 லீக் கிரிக்கெட் அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘ஜெயிலர்’ பட இசை வெளியீட்டு விழாவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in