Last Updated : 08 Aug, 2023 08:45 AM

 

Published : 08 Aug 2023 08:45 AM
Last Updated : 08 Aug 2023 08:45 AM

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | தென் கொரியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா

இந்திய வீரர்கள்

சென்னை: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி நேற்று தனது 4-வது லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும் தரவரிசையில் 9-வது இடமும் வகிக்கும் தென்கொரியாவுடன் மோதியது.

ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் அருமையாக நீலகண்ட சர்மாவிடம் பந்தை தட்டிவிட அவர், அதனை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 3-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் கூட்டணி அமைத்து இலக்குக்கு அருகே நெருங்கி சென்றனர். ஆனால் அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. 12-வது நிமிடத்தில் தென் கொரியா பதிலடி கொடுத்தது. கிம் சங்ஹையூன் அடித்த பீல்டு கோலால் முதல் கால்பகுதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

23-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களில் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இம்முறை ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு இடதுபுறம் விலகிச் சென்றது. 2-வது கால்பகுதியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

31-வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாற்றப்படவில்லை. 33-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து பந்தை வளையத்துக்குள் பெற்ற மன்தீப் சிங் கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் இந்திய அணி 3-1 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. 36-வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அந்த அணியினர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் இந்திய அணி வீரர்கள், தென் கொரியா டிபன்ஸுக்கு கடும் அச்சுறுத்தல்கள் கொடுத்தனர். பல முறை கோல்கம்பத்தை நோக்கி பந்தை கொண்டு சென்றனர். எனினும் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 47-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இது விதிமுறைகளை மீறி தடுக்கப்பட்டதால் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வழங்கப்பட்டது. ஆனால் இதில் ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்தை, தென் கொரியா கோல்கீப்பர் ஜேஹி யோன் கிம் அற்புதமாக தடுத்தார்.

48-வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு தொடர்ச்சியாக 4 முறை பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை கோல்களாக மாற்றப்படவில்லை. இதில் கடைசி வாய்ப்பை ஜேங், வெளியே அடித்தார். அடுத்த சில நிமிடங்களில் மன்தீப் சிங்கின் கோல் அடிக்கும் முயற்சியை தென்கொரியா கோல்கீப்பர் தடுத்தார். அவர் மீது பட்டு திரும்பிய பந்தை சுக்ஜீத்சிங் கோலாக முயன்றார். ஆனாலும் அதுவும் தடுக்கப்பட்டது. 52-வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு மீண்டும் தொடர்ச்சியாக 3 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை வீணடிக்கப்பட்டன.

58-வது நிமிடத்தில் தென் கொரியா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை யங் ஜிஹுன் கோலாக மாற்றினார். இதனால் தென் கொரியா 2-3 என நெருங்கி வந்தது. இறுதி நிமிடத்தில் தென் கொரியா கோல்கீப்பர் தனது இடத்தை விட்டு வெளியேவந்து வீரராக விளையாடினார். எனினும் அந்த அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் ஆனது. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

3-வது வெற்றி: இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்துக்கு வந்ததுடன் அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக 1-1 என டிரா செய்திருந்தது. 3-வது ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை தோற்கடித்திருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நாளை (9-ம் தேதி)பாகிஸ்தானுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான தென் கொரியாவுக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் உள்ளது.

ஜப்பானை வீழ்த்தியது மலேசியா: நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மலேசியா - ஜப்பான் அணிகள் மோதின. இதில் மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 13-வது நிமிடத்தில் நஜ்மி ஜஸ்லான் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து மலேசிய அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். தொடர்ந்து 37-வது நிமிடத்தில் அஷ்ரன் ஹம்சனியும், 59-வது நிமிடத்தில் ஷெல்லோ சில்வேரியஸும் பீல்டு கோல் அடித்து அசத்தினர்.

ஜப்பான் அணி தரப்பில் 59-வது நிமிடத்தில் நிவா டகுமா பீல்டு கோல் அடித்தார். மலேசியா அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகளை பெற்று அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியா நாளை தென் கொரியாவுடன் மோதுகிறது.

பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி: 2-வது ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், 24-வது இடத்தில் உள்ள சீனாவுடன் மோதியது. இதில் பாகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 20-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை முகமது கான் கோலாக மாற்றினார். 33-வது நிமிடத்தில் சீனா இதற்கு பதிலடி கொடுத்தது. அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஜிஷெங் காவோ கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. 39-வது நிமிடத்தில் அஃப்ராஸ் பீல்டு கோல் அடிக்க பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் மேற்கொண்டு இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. அந்த அணி மலேசியாவிடம் தோல்வி அடைந்த நிலையில் தென் கொரியா, ஜப்பான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x