ODI WC அரை இறுதி | ‘இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெறும்’ - இயன் மோர்கன்

இயன் மோர்கன்
இயன் மோர்கன்
Updated on
1 min read

லண்டன்: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடவுள்ளன.

இந்நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் குறித்தும், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்தும் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு 2019-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த இயன் மோர்கன், இந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் தொடர்பான தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான போட்டியாகும். ஐசிசி நடத்தும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது அனைத்து அணிகளுக்குமே பெருமை தரும் விஷயமாகும்.

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி இறுதிக் கட்டத்துக்குச் செல்லும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே போல இந்தியாவும் இறுதிக் கட்டத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் என 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவைகளை தவிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் கோப்பையை வெல்வதற்கான திறமையை கொண்டுள்ளன. எனவே இந்த மிகப்பெரிய போட்டி நிறைந்த தொடரில் நான் குறிப்பிட்ட முதல் 2 அணிகள் (இங்கிலாந்து, இந்தியா) கோப்பையை வெல்வதற்கு வலுவான அணிகளாக கருதப்படுகின்றன. மீதமுள்ள 2 அணிகள் சவாலை கொடுக்கும் அணிகளாகவும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அரை இறுதியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in