

சென்னை: மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நடந்த விபத்தின்போது பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஹரீஷ் (13) என்ற இளம் வீரர் உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சர்வதேச மோட்டார் பந்தய மைதானத்தில் நேற்று முன்தினம் இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார்.
போட்டியில் பங்கேற்று மோட்டார் சைக்கிளை ஓட்டியபோது ஹரீஷ் விபத்தில் சிக்கினார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது தலைக்கவசம் கழன்று விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவிருந்த அனைத்து பந்தயங்களையும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (எம்எம்எஸ்சி) ரத்து செய்துள்ளது.
13 வயதாகும் ஸ்ரேயாஸ், பெங்களூருவில் உள்ள கென்ஸ்ரீ பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த மே மாதம் ஸ்பெயினில் நடைபெற்ற மினிஜிபி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் அவர் பங்கேற்று பட்டம் வென்றிருந்தார். மலேசியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த எம்எஸ்பிகே மோட்டார் பந்தயத்தில், சிஆர்ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் 2500சிசி பிரிவில் (குரூப் பி) பங்கேற்கவிருந்தார் ஸ்ரேயாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.