

சிட்னி: உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்க அணியை, நெதர்லாந்து வீழ்த்தியது.
உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. தற்போது கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சிட்னியின் அல்லயன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதின.
இதில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றில் கால் பதித்தது. நெதர்லாந்து வீராங்கனைகள் ஜில் ரூர்ட், லினெத் பீரன்ஸ்டெயின் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
அமெரிக்கா தோல்வி: மற்றொரு ஆட்டத்தில் ஸ்வீடன், அமெரிக்கா ஆகிய அணிகள் மோதின. இதில் ஸ்வீடன் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆட்ட நேரத்தில் கோல் விழாததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் கோல் விழாத காரணத்தால் பெனால்டி கிக் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வெற்றி பெற்றது.