Published : 07 Aug 2023 12:17 AM
Last Updated : 07 Aug 2023 12:17 AM
கராச்சி: இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அனுமதி கொடுத்திருந்தாலும், இந்தியாவில் பங்கேற்கும் போட்டிகளின்போது பாகிஸ்தான் அணியின் பாதுகாப்பு குறித்தும் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டை அரசியலில் கலக்கக் கூடாது என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், இந்தியாவில் நடக்கவுள்ள ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை அனுப்பவதென்று முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக்கூடாது என்பதையும் பாகிஸ்தான் அரசு நம்புகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்த இந்தியாவின் உறுதியற்ற அணுகுமுறைக்கு எதிராக ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான அணுகுமுறையாக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.
எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்தியாவில் அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து கவலை உள்ளது. இந்த கவலைகளை நாங்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முழு பாதுகாப்பு இந்தியா வருகையின் போது உறுதி செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT