

மதுரை: ஜெர்மனி நாட்டில், உலக அளவில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தென்மாவட்ட வீரர்கள் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.
ஜெர்மனியில் நடைபெற்ற தடகளப் போட்டியில், 26 நாடுகளைச் சேர்ந்த உயரம் குறைந்த 700 மாற்றுத்திறன் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், தமிழகத்திலிருந்து 7 பேர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு விமானக் கட்டணம், நுழைவுக் கட்டணம், உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட செலவுகளுக்காக ஒருவருக்கு தலா ரூ.2 லட்சத்து 49 ஆயிரம் வீதம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி காசோலை வழங்கி அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் மூன்று தங்கப் பதக்கமும், மதுரை அச்சம்பத்தைச் சேர்ந்த மனோஜ் குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெண்கலம், புதுக்கோட்டை மாவட்டம், கோணாம்பட்டு செல்வராஜ் ஈட்டி எறிதலில் தங்கம்,
இதே மாவட்டம் ஒடுகாம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் பாட்மின்டனில் தங்கம், சேலம் வெண்ணிலா 60 மீட்டர், 100 மீட்டர் வட்டு எறிதலில் 3 வெள்ளி, இன்பத்தமிழ் 60 மீட்டர், 100 மீட்டரில் 2 வெண்கலம், வத்தல குண்டுவைச் சேர்ந்த நளினி குண்டு, வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் மற்றும் இரட்டையர் பாட்மின்டன் பிரிவில் வெண்கலம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.