Published : 06 Aug 2023 08:25 AM
Last Updated : 06 Aug 2023 08:25 AM

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | இந்தியா - மலேசியா இன்று மோதல்

இந்திய அணி வீரர்கள்

சென்னை: ஆடவருக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதுகிறது.

7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியை நடத்தும் இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனால் ஜப்பான் அணிக்கு எதிரான 2-வது ஆட்டத்தை போராடி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.

தொடரை வெல்லக்கூடிய அணியாக கருதப்படும் 3 முறை சாம்பியனான இந்தியா, ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தடுமாற்றம் கண்டது. முக்கியமாக பீல்டு கோல் அடிப்பதில் கவனம் செலுத்தாமல் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பெறுவதில் அதீத ஆர்வம் காட்டியது. இருப்பினும் அதையும் இந்திய அணி வீரர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. ஜப்பான் அணிக்கு எதிராக 15 பெனால்டி கார்னர் இந்திய அணிக்கு கிடைத்தது.

இதில் ஒன்றை மட்டுமே இந்திய அணி கோலாக மாற்றியது. ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங் ஆகியோர் பலமுறை பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர். போட்டியின் பெரும்பாலான பகுதியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோல்கள் அடிக்க திணறியது வியப்பை அளித்தது. சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அடித்த 7 கோல்களில் 6 கோல்கள் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கிடைத்தவைதான். ஆனால் ஜப்பான் அணியின் துடிப்பான ஆட்டம் இந்திய அணியின் யுத்திகளை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலைக்கு உட்படுத்தி உள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் கூறும்போது, “கார்னர்கள் அல்லது ஃபீல்டு கோல்கள் என எதுவானாலும் கிடைக்கும் வாய்ப்புகளை கோல்களாக மாற்றவில்லை என்றால் அது எந்த பயிற்சியாளருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம்தான்.

நாங்கள் விரும்பும் வழியில் விளையாடுகிறோம். ஜப்பான் அணிக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று சிறந்த தாக்குதல் ஆட்டம் தொடுத்தோம். நாங்கள் விரும்பிய வழியில் ஆட்டத்தை முடிப்பதற்கு முழு அளவிலான திறனை அடைய சிறிது தொலைவிலேயே உள்ளோம்” என்றார்.

இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மலேசியாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. மலேசியா தனது முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றிருந்தது. அடுத்த ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. உலகத் தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் மலேசியா ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை சந்திக்கிறது.

அந்த அணியின் ஃபிர்ஹான் அஷாரி 4 கோல்கள் அடித்து இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர், இந்திய அணியின் டிபன்டர்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். அதேவேளையில் இந்திய அணி பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். முன்னதாக மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் கொரியா - சீனா அணிகளும், 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ஜப்பான் - பாகிஸ்தான் அணிகளும் மோதுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x