Published : 06 Nov 2017 10:35 AM
Last Updated : 06 Nov 2017 10:35 AM

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்யாததால் தோல்வியை தழுவினோம்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளக்கம்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்யாததால் தோல்வியைத் தழுவினோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸில் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மன்ரோவும், கப்திலும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் 11 ஓவர்களிலேயே நியூஸிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. அணியின் ஸ்கோர் 105 ரன்களாக இருந்த நிலையில் கப்தில் (45 ரன்கள்) ஆட்டம் இழந்தார்.

அதே நேரத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மன்ரோ, கடைசிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று இந்திய அணியை துவைத்தெடுத்தார். அவர் 58 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 109 ரன்களைக் குவிக்க, நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களைக் குவித்தது. மன்ரோவுக்கு உதவியாக வில்லியம்சன் 12, புரூஸ் 18 ரன்களை எடுத்தனர்.

வெற்றிபெற 197 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆட வந்த இந்திய அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. ஷிகர் தவண் 1, ரோஹித் சர்மா 5, ஸ்ரேயஸ் ஐயர் 23, ஹர்திக் பாண்டியா 1 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 67 ரன்களில் 4 விக்கெட்களை இழந்தது. கேட்பன் விராட் கோலி மட்டும் அதிரடியாக பேட்டிங் செய்து 32 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். ஆனால் அவருடன் ஆடிக்கொண்டிருந்த தோனி, பொறுமையாக ரன்களைச் சேர்க்க, கோலி நெருக்கடிக்கு உள்ளானார். வெற்றிக்கு தேவையான ரன் ரேட் அதிகரித்துக்கொண்டே போனதால், ரன் குவிக்கும் வேட்கையில் 65 ரன்களில் கோலி ஆட்டம் இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய தோனி, 37 பந்துகளில் 49 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் இந்திய அணியின் வெற்றிக்கு இது கை கொடுக்கவில்லை. இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூஸிலாந்து அணி, தொடரை 1-1 என சமன் செய்தது.

இப்போட்டியில் தோற்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர் களிடம் கூறியதாவது:

2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 230 ரன்கள் வரை எடுக்கும் நிலையில் இருந்தது. ஆனால் பும்ராவும், புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசி அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இருப்பினும் நியூஸிலாந்து அணி 196 ரன்களைக் குவித்தது.

இந்த அளவு ரன்களை சேஸிங் செய்யும்போது அணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆடியிருக்க வேண்டும். தங்கள் ஸ்டிரைக் ரேட்டை 200 வரை வைத்திருக்க வேண்டும். ஆனால் நமது பேட்ஸ்மேன்கள் அந்த அளவுக்கு அதிரடியைக் காட்டவில்லை. அதிரடி யாக ஆடாததால் தோல்வியைத் தழுவினோம். நான் என்னால் முடிந்த அளவுக்கு போராடிப் பார்த்தேன். தோனி கடைசி கட்டத்தில் நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் வெற்றிபெற இது போதுமானதாக இல்லை.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “நியூஸிலாந்து வீரர்கள் கடந்த டி20 போட்டியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இன்றைய போட்டியில் ஆடினார்கள். குறிப்பாக மன்ரோவின் பேட்டிங் பிரமிக்கத்தக்க அளவில் இருந்தது. அவரும் கப்திலும் சேர்ந்து மிகச்சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். பந்து வீச்சாளர்களும் சிறப்பாக ஆடி இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினர். இந்தியா போன்ற வலிமையான அணியை வீழ்த்த, இப்படிப்பட்ட பேட்டிங்தான் தேவைப்படுகிறது. அடுத்த போட்டியிலும் இதே போன்று ஆடி வெற்றி பெறவேண்டும்” என்றார். -

தோனி பற்றி கோலி கருத்து

தோனியுடனான தனது உறவு குறித்து இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி கூறியிருப்பதாவது:

எனக்கும் தோனிக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் இருப்பதாக சிலர் எழுதி வருகிறார்கள். அதுபோன்ற கட்டுரைகளை நாங்கள் இருவருமே படிப்பதில்லை. எங்களுக்கிடையில் மிக நல்ல உறவு நிலவுகிறது. மிகவும் நல்ல முறையில் அவரிடம் இருந்து எனக்கு கேப்டன் பதவி கைமாறியது. இதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. கேப்டன் பதவியேற்ற பிறகு எனக்கு நிறைய ஆலோசனைகளைச் சொல்லி அவர் வழிநடத்தியுள்ளார். அவரைப்போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது எனது அதிர்ஷ்டம்.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x