Published : 05 Aug 2023 08:25 AM
Last Updated : 05 Aug 2023 08:25 AM

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | பாகிஸ்தான் - தென் கொரியா ஆட்டம் டிரா

சென்னை: ஆடவருக்கான ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடித்தது.

சென்ன எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 2-வது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, பாகிஸ்தானுடன் மோதியது. 18-வது நிமிடத்தில் அப்துல் ஷாகித் பீல்டு கோல் அடித்து பாகிஸ்தான் அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார். 53-வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது.

இதை ஜிஹுன் யங் கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படாததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இரு அணிகளுமே வட்டத்துக்குள் நுழைந்தது சில கோல் வாய்ப்புகளை உருவாக்கின. ஆனால் அவற்றை கோல்களாக மாற்ற முடியாமல் போனது.

2-வது கால்பகுதியின் தொடக்கத்தில் அப்துல் ஷாதிக் கோல் அடித்து திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். 3-வது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவை வீணடிக்கப்பட்டன. 7 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை தென் கொரியாவின் ஜிஹுன் யங் சரியாக பயன்படுத்தினார். இதனாலேயே ஆட்டம் சமநிலைக்கு சென்றது. இதன் பின்னர் இரு அணிகளும் கடைசி நிமிடங்களில் ஆக்ரோஷம் காட்டினாலும் கூடுதல் கோல்கள் அடிக்க முடியவில்லை.

பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் மலேசியாவிடம் 3-1 என்றகோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. அதேவேளையில் தென் கொரியா தனது முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து இருந்தது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் 3-வது நாளான இன்று ஓய்வு ஆகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் தென் கொரியா, சீனாவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி ஜப்பானை சந்திக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x