Published : 15 Nov 2017 10:25 AM
Last Updated : 15 Nov 2017 10:25 AM

ஸ்வீடன் அணிக்கு எதிரான 2-வது கட்ட ஆட்டம் டிரா உலகக் கோப்பை வாய்ப்பை இழந்தது இத்தாலி; 60 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது

உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்று பிளே ஆஃப் 2-வது கட்ட ஆட்டத்தில் ஸ்வீடன் அணிக்கு எதிரான போட்டியை கோல்களின்றி இத்தாலி அணி டிரா செய்தது. ஏற்கெனவே நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்ததால் சராசரி கோல் விகிதப்படி அந்த அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இதன் மூலம் 1958-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் இத்தாலி அணி வெளியேறியது.

2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தாலியின் மிலன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது கட்ட பிளே ஆஃப் ஆட்டத்தில் இத்தாலி, ஸ்வீடன் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தைக் காண மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

இத்தாலி அணியில் நட்சத்திர வீரரான மார்கோ வெராட்டி தடை காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் முன்னணி வீரர்களான சிமோன் ஜாசா, லியோனார்டோ ஸ்பினஸ்ஸோலா ஆகியோரும் காயம் காரணமாக களமிறக்கப்படவில்லை. இதுதவிர டேனியல் டி ரோஸி, ஆன்ட்ரியா பிலோட்டி ஆகியோரும் முழு உடல் தகுதி இல்லாததால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் 4 முறை சாம்பியனான இத்தாலி அணி பெரும்பாலும் பந்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. அந்தோனி கேன்ட்ரிவா, புளோரென்ஸ், சிரோ இம்மோபைல் ஆகியோரின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு ஸ்வீடன் கோல்கீப்பர் ராபின் ஒல்சென் முட்டுக்கட்டை போட்டார். ஒரு கட்டத்தில் ஸ்வீடன் வீரர் மைக்கேல் லஸ்டிக் சுயகோல் அடிப்பதில் இருந்து தப்பித்தார். ஸ்வீடன் அணியின் கோல் கம்பத்துக்கு அருகே வைத்து பந்தை அவர், தடுக்க முயன்றார். ஆனால் பந்து கோல்கம்பத்தின் பக்கவாட்டு கம்பி மீது பட்டு விலகிச் சென்றது. இதனால் அந்த அணி வீரர்கள் பெருமூச்சு விட்டனர்.

இத்தாலி வீரர்கள் எவ்வளவோ போராடியும் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இதன் விளைவு 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஸ்வீடன் அணி உலகக் கோப்பையில் கால்பதித்தது. அந்த அணி கடந்த வாரம் சோல்னாவில் நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் இத்தாலி அணியை 1-0 என வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் ஜேக்கப் ஜோகன்சன் கோல் அடித்திருந்தார்.

இத்தாலி அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறமுடியாமல் வெளியேறுவது இது 3-வது முறையாகும். 1930-ம் ஆண்டு நடைபெற்ற முதல் கோப்பை தொடரில் இத்தாலி கலந்து கொள்ளவில்லை. அதன் பின்னர் 1958-ம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அதே நிலைமையை 60 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துள்ளது இத்தாலி அணி.

மேலும் 6-வது முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி சாதனை படைக்க காத்திருந்த இத்தாலி கோல்கீப்பர் பஃப்போனின் கனவும் தகர்ந்துள்ளது. 39 வயதான அவர், இத்தாலி அணிக்காக 175 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ரஷ்ய உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறவும் பஃப்போன் திட்டமிட்டிருந்தார். சுமார் 20 வருடங்களாக இத்தாலி அணியின் முதுகெலும்பாக செயல்பட்ட அவர், 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

ரஷ்ய உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத நிலையில் பஃப்போன், சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர் கூறும்போது, “அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் எனக்காக வருந்தவில்லை. ஒட்டுமொத்த இத்தாலி கால்பந்துக்காக வருந்துகிறேன். ஏனெனில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எதையும் தடுக்க முடியாது, ஏனெனில் காலம் கடந்து கொண்டிருக்கிறது. எனது கடைசி ஆட்டம் இத்தாலி அணி வெளியேறும் வகையில் அமைந்தது வேதனையாகிவிட்டது” என்றார்.

உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்ததால் இத்தாலி அணி வீரர்கள் மைதானத்திலிருந்து கண்ணீர் மல்க வெளியேறினார்கள். அந்நாட்டு ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். இதுஒருபுறம் இருக்க 2006-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றதால் ஸ்வீடன் வீரர்களும், ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற யுரோ கால்பந்து தொடருடன் நட்சத்திர வீரர் இப்ராகிமோவிக் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஓட்டுமொத்த அணியாக ஸ்வீடன் வீரர்கள் அசத்தி உள்ளனர்.

ஸ்வீடன் பயிற்சியாளர் ஆண்டர்சன் கூறும்போது, “இத்தாலி அணிக்கு எதிரான ஆட்டம் எங்களது கூட்டு வலிமையை காட்டியது. இப்ராகிமோவிக் இருந்திருந்தால் எங்களது ஆட்டம் வித்தியாசமாக இருந்திருக்கும். ஓய்வு பெற்ற அவர், சிறந்த சாம்பியன் வீரர். தற்போது நாங்கள் வேறு வழியில் விளையாடி வருகிறோம்” என்றார். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x