

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் ஜொலிக்காதது குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் சுநீல் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து கோலி இதுவரை 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் முறையே 1,8 ரன்களை எடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்தார். ஆனால் 2-வது இன்னிங்ஸில் கோலி எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஸ்டெம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தவிதம் ரசிகர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் அவரது பேட்டிங் மோசமாக அமைந்துள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக அவரது பெண் தோழியான நடிகை அனுஷ்கா சர்மா இப்போது இங்கிலாந்து சென்றுள்ளார். அவருடன் சேர்ந்து கோலி பொழுதைப் போக்கி வருவதால்தான் பேட்டிங்கில் அவரது கவனம் முழுமையாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கோலியின் பேட்டிங் குறித்து சுநீல் கவாஸ்கர் கூறியுள்ளது:
சில பிட்சுகள் சில பேட்ஸ்மேன்களுக்கு சரியாக கை கொடுக்காது. இது எனது பேட்டிங் அனுபவத்தில் கண்ட உண்மை. அதேபோல இங்கிலாந்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாடிய பிட்சுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்துள்ள வீரர் எனவே இரு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்கவில்லை என்பதற்காக விமர்சிப்பதோ, அவர் மீதான நம்பிக்கையை குறைப்பதோ கூடாது. அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது திறமையை நிரூபிப்பார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.