Published : 04 Aug 2023 06:20 AM
Last Updated : 04 Aug 2023 06:20 AM
சென்னை: ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மலேசியா - பாகிஸ்தான் மோதின. இதில் மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மலேசியா அணி பல முறை பாகிஸ்தான் அணியின் வட்டத்துக்குள் நுழைந்து அச்சுறுத்தல் கொடுத்தது. இதன் பயனாக அந்த அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை மலேசிய அணி கோலாக மாற்றத் தவறியது. இதன் பின்னர் பாகிஸ்தான் அணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. முதல் கால்பகுதியின் கடைசி 5 நிமிடங்களில் பாகிஸ்தான் அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவற்றை அந்த அணி வீணடித்தது. 2-வது கால்பகுதியின் இறுதியில் மலேசிய அணி அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து பாகிஸ்தான் அணியை மிரளச் செய்தது. 28 மற்றும் 29-வது நிமிடங்களில் ஃபிர்ஹான் அஷாரி அடித்த பீல்டு கோல் காரணமாக மலேசியா 2-0 என முன்னிலை பெற்றது. 44-வது நிமிடத்தில் மீண்டும் மலேசியா அணி தாக்குல் ஆட்டம் தொடுத்த நிலையில் சில்வேரியஸ் ஷெலோ கோல் அடித்து அசத்தினார்.
இதனால் மலேசியா 3-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது. 53-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்து. ஆனால் மலேசிய கோல்கீப்பர் ஜலீல் மர்ஹான் அற்புதமாக செயல்பட்டு கோல் விழவிடாமல் தடுத்தார். எனினும் அடுத்த இரு நிமிடங்களில் பாகிஸ்தான் அணி பீல்டு கோல் அடித்தது. 55வது நிமிடத்தில் அப்துல் ரஹ்மான் இந்த கோலை அடித்தார். எனினும் பாகிஸ்தான் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT