Published : 02 Aug 2023 07:31 AM
Last Updated : 02 Aug 2023 07:31 AM

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: தோல்வியில் இருந்து தப்பித்தது அமெரிக்கா; இங்கிலாந்து, டென்மார்க் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்

டென்மார்க் வீராங்கனைகள்

ஆக்லாந்து: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆக்லாந்தின் ஈடன்பார்க் மைதானத்தில் நேற்று ‘இ’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் வரை இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்பட்டவில்லை. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இதன் 2-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீராங்கனை அனா கேப்டா இலக்கை நோக்கி துல்லியமாக உதைத்த பந்து கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் பட்டு விலகி சென்றது. இதனால் அமெரிக்க அணி கோல் வாங்குவதில் இருந்தும், தோல்வி அடையும் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தது. ‘இ’ பிரிவில் லீக் ஆட்டங்களின் முடிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்கா ஒரு வெற்றி, 2 டிராக்களுடன் 5 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்துநாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவுக்கு எதிராக தோல்வியை தவிர்த்துள்ளது போர்ச்சுகல் அணி. இதற்கு முன்னர் விளையாடிய 11 ஆட்டங்களிலும் போர்ச்சுகல் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த 11 ஆட்டங்களிலும் அமெரிக்கா 39 கோல்களை வேட்டையாடி இருந்தது. ஒரு முறைகூட கோல் வாங்கவில்லை.

நெதர்லாந்து கோல் மழை: ‘இ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - வியட்நாம் அணிகள் மோதின. டூனிடின் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் எஸ்மி பிரக்ட்ஸ் (18, 57-வது நிமிடங்கள்), ஜில் ரூர்ட்(23, 83-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களும் லீக் மார்டென்ஸ் (8-வது நிமிடம்), கட்ஜா ஸ்னோய்ஸ் (11-வது நிமிடம்), டேனிலி வான் டி டோன்க் (45-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒருகோலும் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் தனது பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி. 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி, ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்திருந்தது.

இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி: ‘டி’ பிரிவில் பெர்த் நகரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் - ஹைதி அணிகள் மோதின. இதில் டென்மார்க் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 21-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்னில் ஹார்டர் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் இறுதியில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 10-வது நிமிடத்தில் சான் ட்ரோல்ஸ்கார்ட் நீல்சன் கோல் அடித்து அசத்தினார்.

டென்மார்க் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் அந்த அணி தனது பிரிவில் 2-வது இடம் பிடித்துநாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 3 ஆட்டத்தில் விளையாடி உள்ள டென்மார்க் 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது.

‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் லாரன் ஜேம்ஸ் (41, 65-வது நிமிடங்கள்) இரு கோல்களும் அலிசியா ரூஸோ (4-வது நிமிடம்), லாரன் ஹெம்ப் (26-வது நிமிடம்), சோலி கெல்லி (77-வது நிமிடம்), ரேச்சல் டேலி (84-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இங்கிலாந்து அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x