மணிப்பூர் கலவரத்தில் என்னுடைய வீடு எரிக்கப்பட்டது: இந்திய கால்பந்து வீரரின் சோகம்

சிங்லென்சனா சிங்
சிங்லென்சனா சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: மணிப்பூர் கலவரத்தில் என்னுடைய வீடு எரிக்கப்பட்டது, நான் ஈட்டிய சொத்துகள் அனைத்தும் கலவரத்தில் நாசமாகிவிட்டது என்று இந்திய கால்பந்து வீரர் சிங்லென்சனா சிங் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிங்லென்சனா சிங். இந்திய கால்பந்து அணி வீரரான இவர் தேசிய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் பல்வேறு கிளப் அணிகளுக்காகவும், ஐஎஸ்எல் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் மணிப்பூரில் பழங்குடி இனத்தவர் இடையே நடைபெற்ற மோதல் கலவரமாக மாறியது. இதில் மணிப்பூரில் பலரது வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதுவரை அங்கு நடந்த கலவர சம்பவங்களில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். தீவைப்பு சம்பவத்தின்போது சிங்லென்சனா சிங்கின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது. கலவரத்தில் அவரது சொத்துகள் சூறையாடப்பட்டன. இதுகுறித்து சிங்லென்சனா சிங் கூறியதாவது:

மணிப்பூரில் கலவரம் தொடங்கிய நாளில் நான் ஏஎஃப்சி கோப்பை கால்பந்துப் போட்டியில் மோகன் பகான் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் கால்பந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். இந்தப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. போட்டி முடிந்ததும் நான் அறைக்குத் திரும்பியபோது எனது செல்போனுக்கு ஏராளமான எஸ்எம்எஸ்கள் வந்திருந்தன. கலவரம் வெடித்ததால் மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக செய்திகள் வந்திருந்தன.

எனது வீடு சுராசந்த்பூர் மாவட்டம் குமுஜமா லேகை கிராமத்தில் அமைந்துள்ளது. கலவரத்தின்போது எனது வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது. எனது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. சுராசந்த்பூரில் நான் உருவாக்கி வைத்திருந்த கால்பந்து டர்ஃப் மைதானம் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேட்டதும் எனது இதயம் நொறுங்கிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பினேன்.

எங்கள் பகுதி இளைஞர்களுக்காக நான் உருவாக்கிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சூறையாடப்பட்டுவிட்டன.

இதையடுத்து நான் மணிப்பூருக்கு உடனடியாக சென்று பெற்றோரைச் சந்தித்தேன். கலவரத்தில் தப்பித்த என் பெற்றோர் பாதுகாப்பான இடத்தில் இருந்தனர். எங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் கால்பந்து வீரர்களுக்காக கட்டப்பட்டு இருந்த கால்பந்து டர்ஃப் மைதானம் முழுவதும் நாசமாகிவிட்டது.

இதுநாள் வரை நான் சேர்த்திருந்த சொத்துகள் அனைத்தும் பாழாகிவிட்டன. இளம் கால்பந்து வீரர்களை மேம்படுத்த வேண்டும் என்ற எனது கனவு, கானல் நீராகிவிட்டது. தற்போது எனது பெற்றோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

ஆனால், இந்த சம்பவங்களால் நான் மனம் சோர்ந்துவிட மாட்டேன். எங்கள் பகுதி கால்பந்து வீரர்களுக்காக நான் ஏதாவது செய்வேன். மீண்டும் புதிதாக கால்பந்து மைதானம் அமைக்க முயற்சி செய்வேன். இதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in