Published : 31 Jul 2023 11:29 PM
Last Updated : 31 Jul 2023 11:29 PM
லண்டன்: நடப்பு ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கடைசி விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ளார் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்.
லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்கள் மற்றும் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 395 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் 91 ரன்கள், பேர்ஸ்டோ 78 ரன்கள், ஸாக் கிராவ்லி 73 ரன்கள், ஸ்டோக்ஸ் மற்றும் டக்கெட் தலா 42 ரன்கள் எடுத்தனர். 81.5 ஓவர்களில் 395 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. அதனால் 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது.
வார்னர் மற்றும் கவாஜா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். கவாஜா 72 ரன்கள் எடுத்து வெளியேறினார். லபுஷேன் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஸ்மித் மற்றும் ஹெட் இணைந்து 95 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஹெட் 43 ரன்களிலும், ஸ்மித் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 94.4 ஓவர்களில் 334 ரன்கள் எடுத்து ஆஸி. ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பவுலர்கள் அபாரமாக பந்து வீசி இருந்தனர். அதன் மூலம் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. இந்த தொடரின் 4-வது போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி ஸ்பெல்லில் அபாரமாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் பிராட். 37 வயதான அவர், கடந்த 2006-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அவரது அறிமுகம் அமைந்தது. இருந்த போதும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் 6-வது இடத்தில் அவர் உள்ளார். இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 604 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
A fairytale ending for a legend of the game.
Broady, thank you #EnglandCricket | #Ashes pic.twitter.com/RUC5vdKj7p
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT