

குயின்ஸ்லாந்து: ஃபிபா உலக மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் மகளிர் அணியை வீழ்த்தியது.
உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. நேற்று குயின்ஸ்லாந்திலுள்ள சன்கார்ப் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், பிரேசில் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீராங்கனை யூஜின் லே சோம்மர் ஒரு கோலடித்தார். 2-வது பாதியில் பிரேசில் வீராங்கனை டெபோரா கிறிஸ்டின் ஒரு கோலடிக்க 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தில் சமநிலை எட்டப்பட்டது.
இறுதி கட்டத்தில் (83-வது நிமிடம்) பிரான்ஸ்வீராங்கனை வென்டி ரெனார்ட் ஒரு கோலடித்தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 2-1 என்றகோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.
நியூஸிலாந்தில் உள்ள வெலிங்டன் ரீஜனல் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ஸ்வீடன் அணியினர் சிறப்பாக விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியைச் சாய்த்தனர். ஸ்வீடனின் அமன்டா 39, 50-வது நிமிடங்களிலும், பிரிடோலினா ரோல்போ 44-வது நிமிடத்திலும், ஸ்டினா பிளாக்ஸ்டெனியஸ் 46-வது நிமிடத்திலும், ரெபேக்கா பிளாம்குவிஸ்ட் 95-வது நிமிடத்திலும் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.