

இங்கிலாந்து ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்று சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் இடது கை சுழற் பந்துவீச்சாளர் முரளி கார்த்திக் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது பற்றி ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில், இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் தான் பெற்ற அனுபவத்தை வைத்து இந்திய ஸ்பின்னர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்:
'இங்கிலாந்தில் பந்துவீச ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு பெரிய மனது வேண்டும். நமது திறமை மற்றும் பொறுமைக்கு சோதனைகள் அங்கே அதிகம். இதுதான் இங்கிலாந்தில் நான் கவுன்டி கிரிக்கெட்டில் ஆடிய பிறகு கற்ற பாடம். 8 ஆண்டுகளில் 4 அணிகளுக்கு நான் நிறைய போட்டிகளில் ஆடியுள்ளேன்.
இங்கிலாந்து ஸ்பின்னர் கிரேம் ஸ்வான் ஓய்வு பெற்றுவிட்டார். மற்றொரு ஸ்பின்னரான மாண்ட்டி பனேசரும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டிருப்பதால் நிச்சயம் இங்கிலாந்து இந்த முறை ஸ்பின்னிற்குச் சாதகமான பிட்ச்களை தயாரிக்காது என்று கூறலாம்.
முதலில் பேட்டிங்கில் போதிய ரன்களை எடுப்பது அவசியம், அதன் பிறகு தன்னம்பிக்கையுடன் வீச வேண்டும். எப்போதும் தாக்குதல் பந்து வீச்சு வீசவேண்டும் என்ற அவசியமில்லை. பேட்ஸ்மென்களுக்கு எப்போதும் நெருக்கடி கொடுக்கும் பவுலர் நான் என்று அஸ்வின் கூறியிருந்ததைக் கவனித்தேன், எப்போதும் நெருக்கடி கொடுப்பது பற்றி பேசுவது எளிது. ஆனால் செய்து காட்டுவது கடினம். அதுவும் 2012-13 தொடரில் இந்தியாவில் இங்கிலாந்து அணியின் கேப்டன் அலிஸ்டர் குக் உட்பட இங்கிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மென்களும் எப்படி நமது ஸ்பின் பந்து வீச்சை அடித்து ஆடினர் என்பதை நாம் பார்த்தோம்...
...அயல்நாட்டு பிட்ச்களில் அஸ்வின் பந்துகளை அதிகம் கட் மற்றும் புல் ஷாட்களை பேட்ஸ்மென்கள் ஆடியுள்ளதைப் பார்த்திருக்கிறேன். இங்கு பேட்ஸ்மென்களுக்கு அருகில் ஓரிரு பீல்டர்களை நிறுத்துவதோடு, அந்த குறிப்பிட்ட பேட்ஸ்மென் ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக எந்த ஷாட்டை அடிக்கடி ஆடுகிறார் என்பதைக் கணித்து அந்த இடத்தில் பீல்டரை நிறுத்துவதும் அவசியம்.
சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்திய ஸ்பின்னர்கள் பற்றிக் குறிப்பிடுவதை இங்கே கவனத்தில் கொள்வது நல்லது, இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீச்சின் போது அதிகம் தோள்பட்டையையும் விரல்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஸ்பின்னிற்கு உதவிகரமாக இல்லாத ஆட்டக்களத்தில் உடலை சற்றே பின்புறமாக வளைத்து வீச வேண்டும், ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன் ஸ்பின்னிற்கு ஆதரவு இல்லாத பிட்ச்களிலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதற்குக் காரணம் அவர் பந்து வீசும் போது உடலை நன்றாகப் பயன்படுத்துவதே என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறுவார்.
மேலும் இங்கு ஃபீல்டிங் நிலைகளை மாற்றி பேட்ஸ்மென்களிடத்தில் சில ஐயங்களை ஏற்படுத்தவேண்டும். சில வேளைகளில் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் ரன்களைக் கட்டுப்படுத்தும் ரோலையும் ஸ்பின்னர்கள் செய்ய வேண்டியத் தேவை ஏற்படும். ஆகவே இங்கிலாந்தில் ஸ்பின் பந்து வீச்சு எதிர்பார்ப்பதை விட மிகமிக கடினமானது.
லார்ட்ஸ் மற்றும் ஓவல் பிட்ச்கள் மிகவும் மந்தமாக இருக்கும். டிரெண்ட் பிரிட்ஜில் ஸ்பின்னர்களுக்கு துளி கூட சாதகமான பிட்ச் இருக்காது.
மொத்தத்தில் ஸ்பின் பந்து வீச்சிற்கு ஆதரவான பிட்ச்கள் இங்கு இருக்காது. அதுவும் இலங்கைக்கு எதிராக தொடரைத் தோற்ற இங்கிலாந்து நிச்சயம் ஸ்பின்னிற்குச் சாதகமான பிட்ச்களை போடாது என்று கூறலாம்.'
இவ்வாறு அந்தப் பத்தியில் கூறியுள்ளார் முரளி கார்த்திக்.