மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டி: ஜடேஜா - குல்தீப் யாதவ் இணைந்து புதிய சாதனை

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டி: ஜடேஜா - குல்தீப் யாதவ் இணைந்து புதிய சாதனை
Updated on
1 min read

பிரிட்ஜ்டவுன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் இணைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

இந்தியா, மேற்கு இந்தியத் தீவு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் பார்படோஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரண்டன் கிங் 17, ஷாய் ஹோப் 43, அலி அத்தானஸ் 22, ஹெட்மயர் 11 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களைச் சாய்த்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 22.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய அணி வீரர்கள் இஷான் கிஷன் 52, ஷுப்மன் கில் 7, சூர்யகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5, ஷர்துல் தாக்குர் 1 ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 16 ரன்களும், ரோஹித் சர்மா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 4 விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா - குல்தீப் யாதவ் இணைந் து 7 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம்அவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆட்டத்தில் 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட்களை வீழ்த்தியது இதுவே முதல்முறை என்ற புதிய சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.

குறைந்தபட்ச ஸ்கோரில் 2-ம் இடம்: இந்தப் போட்டியில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிராக 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி பதிவு செய்தது. ஏற்கெனவே 2018-ல் திருவனந்தபுரத்தில் இந்திய அணிக்கு எதிராக 104 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்திருந்தது. இந்த வரிசையில் 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை (114 ரன்கள்) நேற்று அந்த அணி பதிவு செய்தது. 3-வது குறைந்தபட்ச ஸ்கோராக 121 ரன்களையும் (போர்ட் ஆஃப் ஸ்பெயின், 1997), 4-வது குறைந்தபட்ச ஸ்கோராக 123 ரன்களையும் (கொல்கத்தா, 1993), 5-வது குறைந்தபட்ச ஸ்கோராக 126 ரன்களையும் (பெர்த், 1991) இந்தியாவுக்கு எதிராக அந்த அணி பதிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in