

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
லண்டன் தி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. பென் டக்கெட் 41 ரன்னில் மிட்செல் மார்ஷ் பந்திலும், ஸாக் கிராவ்லி 22 ரன்னில் பாட் கம்மின்ஸ் பந்திலும் வெளியேறினர். மொயின் அலி 34 ரன்னில் போல்டானார்.
ஜோ ரூட் 5 ரன்னில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடிய ஹாரி புரூக் 91 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டா 4 ரன்னிலும் போல்டானார்கள். கிறிஸ் வோக்ஸ் 36, மார்க் வுட் 28, ஸ்டூவர்ட் பிராடு 7 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணி 54.4 ஓவர்களில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், டாட் மர்பி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா, 26 ரன்கள் மற்றும் லபுஷேன் 2 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். வார்னர், 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.