Published : 20 Nov 2017 06:04 PM
Last Updated : 20 Nov 2017 06:04 PM

சர்வதேச கிரிக்கெட்டில் விரைவில் 50 சதங்கள்: ஆம்லாவுடன் இணைந்த விராட் கோலி

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இன்று இலங்கைக்கு எதிராக சதம் எடுத்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 50வது சதத்தை எடுத்து குறைந்த இன்னிங்சில் 50 சதங்கள் சாதனையில் ஹஷிம் ஆம்லாவுடன் இணைந்தார்.

ஹஷிம் ஆம்லா 348 இன்னிங்ஸ்களில் 50 சர்வதேச சதங்களை எடுக்க, விராட் கோலி இதே 348 இன்னிங்ஸ்களில் இன்று 50வது சதத்தை எட்டினார். சச்சின் டெண்டுல்கர் 376 இன்னிங்ஸ்களில் 50 சர்வதேச சதங்களை எட்டியுள்ளார். ஆனால் சச்சின் முதலில் 75-76 ஒருநாள் போட்டிகளில் பின்னால்தான் களமிறங்கினார். அதன் பிறகே தொடக்க வீரரானது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக கோலியையும் சேர்த்து 8 பேட்ஸ்மென்கள் 50 சர்வதேச சதம் எடுத்துள்ளனர், சச்சினுக்குப் பிறகு 50 சதங்கள் எடுத்த 2-வது வீரரானார் விராட் கோலி.

இரண்டாவது இன்னிங்ஸில் 2வது முறையாக டெஸ்ட் போட்டியில் சதம் எடுத்துள்ளார் விராட் கோலி. இரண்டுமே இலங்கைக்கு எதிரானது.

இந்தச் சதத்துக்கு முன்பாக ஈடன் கார்டன்ஸில் விராட் கோலி மொத்தமாக 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 83 ரன்களையே எடுத்திருந்தார், ஆனால் ஈடன் கார்டன்ஸில் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் 3 அரைசதங்களை எடுத்துள்ளார்.

கோலி எடுத்த 18 டெஸ்ட் சதங்களில் இன்று எடுத்த 119 பந்து சதமே அவரது வேகமான சதமாகும். முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக 2013-14-ல் வெலிங்டன் மைதானத்தில் 129 பந்துகளில் சதம் எடுத்திருந்தார்.

பல வடிவங்களிலும் கோலி இந்த ஆண்டு எடுத்த 9-வது சதமாகும் இது. 3 சதங்கள் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் ஒருநாள் போட்டிகளில்.

ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித் ஆகியோர் ஒரே ஆண்டில் 9 சதங்களை எடுத்துள்ளனர், அதன் பிறகு கேப்டனாக விராட் கோலி தற்போது இந்த ஆண்டில் 9 சதங்கள் எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மேலும் கேப்டனாக ஒரே டெஸ்டில் டக் மற்றும் சதமெடுத்த முதல் இந்திய கேப்டனாவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x