

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் 12 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின டேக்வாண்டோ விளையாட்டு போட்டிகள் திண்டிவணத்தில் நவ.10 முதல் நவ.12 தேதி வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் மாநிலம் முழுவதிலிருமிருந்து சுமார் 600 பெண்கள் கலந்துக் கொண்டனர். இதில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியைச் சேர்ந்த டேக்வாண்டோ வீராங்கணைகள் 15 பேர் கலந்துக் கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயதினருக்கு பல்வேறு எடை பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 12 பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர்.
பெரம்பலூர் விளையாட்டு விடுதியில் டேக்வாண்டோ பயிற்சி தொடங்கிய இரண்டாம் ஆண்டிலேயே மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் 12 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர். பதக்கம் வென்ற வீராங்கணைகள் மற்றும் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜ் ஆகியோரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா பாராட்டினார்.