கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபீல்டர் ஜான்ட்டி ரோட்ஸ் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

ஜான்ட்டி ரோட்ஸ் | கோப்புப்படம்
ஜான்ட்டி ரோட்ஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

“களத்தில் பந்து எங்கு இருக்கிறதோ, நான் அங்கே இருக்க விரும்புவேன்” என நேர்காணல் ஒன்றில் முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்திருந்தார். அது போலவே அவரது செயல்படும் இருக்கும். இன்று அவருக்கு பிறந்தநாள்.

கடந்த 1969-ல் இதே நாளில் தென்னாப்பிரிக்கவில் பிறந்தவர். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 1992 முதல் 2003 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர். பேட்டிங், பவுலிங் என்றில்லாமல் பந்தை தடுக்கும் அபார ஃபீல்டிங் திறன் மற்றும் துல்லியமான த்ரோ போன்ற கள செயல்பாடுகளின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 52 டெஸ்ட் மற்றும் 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 8,467 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தமாக 139 கேட்ச்களை பிடித்துள்ளார். அதில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 105 கேட்ச்களை பற்றியுள்ளார். குறிப்பாக பேக்வேர்ட் பாயிண்ட் திசையில் அவர் நிற்கும் போது ‘எங்க பந்தை என்ன தாண்டி அடி பார்க்கலாம்’ என பேட்ஸ்மேன்களிடம் சொல்வது போலவே இருக்கும்.

“டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளை நான் விளையாடி உள்ளேன். அது அனைத்தும் சேர்ந்து எனது ஃபீல்டிங் திறனுக்கு உதவியதாக எண்ணுகிறேன். எனக்கு ஃபீல்டிங் செய்ய பிடிக்கும். என்னால் ஒரு இடத்தில் உட்கார முடியாது. இங்கும், அங்கும் நகர்ந்துக் கொண்டே இருப்பேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்து முதல் கடைசி ஓவர் வரை பந்தை விரட்ட எனக்கு பிடிக்கும். அதனால் களத்தில் பந்து எங்கு இருக்கிறதோ, நான் அங்கே இருக்க விரும்புவேன்.

சிறந்த ஃபீல்டருக்கு கால்களின் நகர்வு ரொம்பவே முக்கியம். ஏனெனில் கேட்ச் பிடிக்க சிறந்த கைகள் தேவை. ஆனால், அங்கு விரைந்து செல்ல கால்களை நகர்த்துவது அவசியம் என நினைக்கிறேன். எனக்கு பிடித்த ஃபீல்டர்களில் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கொலின் பிளான்டுக்கு முதலிடம்” என ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்சமாமை ரன் அவுட் செய்த ஜான்ட்டி ரோட்ஸ்: 1992-ல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அறிமுக வீரராக களம் கண்டார் ஜான்ட்டி ரோட்ஸ். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இன்சமாம்-உல்-ஹக்கை ரன் அவுட் செய்து, தனது அபார ஃபீல்டிங் திறன் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். பந்தை பற்றியதும் காற்றில் பறந்து ஸ்டம்புகளை தகர்த்து அசத்தியிருப்பார். அதே போட்டியில் இஜாஸ் அகமதை கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அங்கிருந்து தொடங்கியது அவரது ஃபீல்டிங் சம்பவம். இன்று கிரிக்கெட்டில் உலகில் சிறப்பாக ஃபீல்ட் செய்து வரும் பல வீரர்களுக்கு அவர் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in