Published : 07 Nov 2017 08:11 PM
Last Updated : 07 Nov 2017 08:11 PM

நல்ல சம்பளம் கொடுக்காமல் வெறும் மன்னிப்பு எம்மாத்திரம்: மே.இ.தீவுகளின் டேரன் சமி காட்டம்

பிற டி20 லீகுகளில் ஆடும் மே.இ.தீவுகள் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் வெறும் மன்னிப்பு மட்டும் வழங்குதல் போதாது என்று மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணியின் டேரன் சமி தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பின் இணையத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை மே.இ.தீவுகள் ஏறக்குறைய இழந்து விட்ட நிலையில் கிரிக்கெட் மே.இ.தீவுகள் வாரியம் தங்கள் அணித்தேர்வு விவகாரங்களில் பணமழை டி20 லீகுகளில் ஆடும் வீரர்களுக்கு சலுகை அளிக்க முடிவெடுத்துள்ளதையடுத்து கிறிஸ் கெய்ல், டிவைன் ப்ராவோ, கெய்ரன் பொலார்ட், சுனில் நரைன் போன்ற வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்று 2019 உலகக்கோப்பைக் கிரிக்கெட்டுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்த மே.இ.தீவுகள் இந்த சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தனியார் டி20 கிரிக்கெட் தொடர்களை ஒப்பிடும்போது மே.இ.தீவுகள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பணம் கிடைப்பதில்லை என்று கூறுகிறார் டேரன் சமி, “இதுதான் பிரச்சினை. முந்தைய சி.இ.ஓ. வினால் இந்தப் பிரச்சினை அனைத்தும் தொடங்கியது. மே.இ.தீவுகள் அணிக்குத்தான் வீரர்கள் முதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் செய்வதென்னவோ முதலில் சம்பளத்தைக் குறைப்பதாக உள்ளது.

எங்கும் செல்ல வேண்டாம், உள்நாட்டில் ஆடுங்கள் என்கிறீர்கள் ஆனால் முதல் வேலை சம்பளக்குறைப்பைச் செய்கிறீர்கள்.

சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெற மாட்டோம் என்று பயந்தேன், அப்படியே நடந்தது. இப்போது உலகக்கோப்பை பிரச்சினை. மார்ச்சில் ஜிம்பாப்வே சென்று ஹோல்டர் தலைமை மே.இ.தீவுகள் அணி இறுதிக்குள் நுழைவார்கள் என்று கருதுகிறேன். மே.இ.தீவுகள் இல்லாமல் இனி ஐசிசி போட்டிகள் இருக்காது என்று நம்புகிறேன்.

கடைநிலையிலிருந்து எழுச்சியுற முடியும், கடந்த முறை இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காகச் சென்ற அணியை என்னென்னவோ வர்ணித்தார்கள் ஆனால் வெற்றி பெற்றோம்.

இந்தியாவில் தொடரை ஆடிய போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தேன், அவர்கள் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்க முடியாதது என்றேன். 70% வீரர்கள் சம்பளத்தைக் குறைத்தால், இதைத்தான் இன்னமும் செய்கிறார்கள், திடீரென நான் போராளியானேன். நான் எப்போதும் நான் நம்பும் விஷயத்துக்கு, நாங்கள் நம்பும் விஷயத்துக்கு ஆதரவாகப் போராடும் குணமுடையவன்” என்றார் டேரன் சமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x