Published : 26 Jul 2023 09:09 AM
Last Updated : 26 Jul 2023 09:09 AM
வெலிங்டன்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று வெலிங்டன் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து - பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. இதில் அறிமுக அணியான பிலிப்பைன்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நியூஸிலாந்தை தோற்கடித்தது. இந்த போட்டியை காண 33 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.
நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 1995-ம் ஆண்டு சாம்பியனான நார்வே அணியை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்திருந்தது. இதேபோன்ற செயல்திறனை பிலிப்பைன்ஸ் அணிக்குஎதிரான ஆட்டத்திலும் நியூஸிலாந்து வீராங்கனைகள் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் பிலிப்பைன்ஸ் அணிக்கு ப்ஃரீகிக் கிடைத்தது.
இதில் பாக்ஸ் பகுதிக்குள் உதைக்கப்பட்ட பந்தை நியூஸிலாந்து வீராங்கனைகள் சரியாக விலக்கிவிடவில்லை. இதை பயன்படுத்தி சாரா எக்ஸ்விக் சரினா போல்டனுக்கு அனுப்ப, அவர் துள்ளியவாறு தலையால் முட்டி பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் பிலிப்பைன்ஸ் அணிக்காக முதல் கோலை அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சரினா போல்டன். நியூஸிலாந்து அணி 70-வது நிமிடத்தில் கோல் அடித்தது. ஆனால் அது ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.கடைசி வரை முயற்சி செய்தும் நியூஸிலாந்து அணியால் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது.
கொலம்பியா அசத்தல்: சிட்னி மைதானத்தில் ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொலம்பியா - கொரியா அணிகள் மோதின. இதில் கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 30-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேட்லினா உஸ்மே கோலாக மாற்றினார். அடுத்த 9-வது நிமிடத்தில் லின்டா கைசிடோ கோல் அடித்து அசத்தினார்.
ஹாமில்டன் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - நார்வே அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT