

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் உணவு இடைவேளையின் போது இந்தியா தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் தோனி 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து 2 சிக்சர்களுடன் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். தோனி இன்னும் 19 ரன்களை எடுத்துச் சதம் கண்டால் அயல்நாட்டில் அவரது முதல் சதம் இதுவாகவே அமையும்.
259/4 என்று துவங்கிய முரளி விஜய் மற்றும் தோனி நிதான ஆட்டத்தையே கடைபிடித்தனர். பந்து வீச்சிற்கு ஒன்றுமேயில்லாத இந்தப் பிட்சில் இன்னும் கொஞ்சம் அடித்து ஆடியிருக்கலாம். ஒருவேளை பெரிய ஸ்கோரை எடுத்து இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் முடிவுடன் தோனி ஆடிவரலாம். அதாவது இந்தப் பிட்சில் பெரிய ஸ்கோர் எடுத்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
முரளி விஜய் 146 ரன்களில் 25 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தார். அவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் எல்.பி. ஆனார். பந்து தொடைப்பகுதி காப்பில் பட்டது. நிச்சயம் பந்து ஸ்டம்பைத் தாக்காது என்றே ரீ-ப்ளேயில் தெரிந்தது. ஆனால் நடுவர் ஆக்சன்போர்ட் வித்தியாசமாக யோசித்திருப்பார் போலும். கையை உயர்த்தினார். தோனியும், விஜய்யும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 126 ரன்களைச் சேர்த்தனர்.
இன்றைய தினத் துவக்கத்திலேயே மேட் பிரையர், தோனிக்கு ஒரு கேட்ச் வாய்ப்பைக் கோட்டை விட்டார். லென்த்தில் விழுந்தப் பந்தை டிரைவ் ஆடினார் தோனி பந்து மட்டையின் விளிம்பில் பட்டு மேட் பிரையருக்கு வலது புறமாகக் கேட்ச் பிடிக்கும் உயரத்தில் சென்றது. அவர் டைவ் அடித்துப் பார்த்தார் முடியவில்லை பந்து பவுண்டரிக்குச் சென்றது.
ஜடேஜா களமிறங்கி ஆக்ரோஷமாக ஆடினார். மொயின் அலி வீசிய ஜெண்டில் ஆஃப் ஸ்பின் பந்தை அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசினார்.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.