Published : 20 Nov 2017 10:19 AM
Last Updated : 20 Nov 2017 10:19 AM

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா பதிலடி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 294 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஒருவிக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சேதேஷ்வர் புஜாரா 52 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கேப்டன் தினேஷ் சந்திமால் 13, நிரோஷன் திக்வெலா 14 ரன்களுடன் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

திக்வெலா 35, தினேஷ் சந்திமால் 28, தசன் ஷனகா 0, திலுருவன் பெரேரா 5, சுரங்கா லக்மல் 16 ரன்களில் வெளியேற கடைசி கட்டத்தில் ரங்கனா ஹெராத் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முடிவில் இலங்கை அணி 83.4 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணித் தரப்பில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்களும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

122 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவண் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 73, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி 49 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x