

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸில் ரெய்டு நடந்து வருகிறது. இதனால் இன்று ஜாஸ் சினிமாஸில் படக்காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள தினகரன், சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், ஜெயா டி.வி. அலுவலகம் உள்ளிட்ட 150 இடங்களில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் உள்ள காண்ட்ராக்டர் செந்தில் வீடு, பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகம், சென்னை படப்பைக்கு அருகில் உள்ள மிடாஸ் மது ஆலை இடங்களிலெல்லாம் சோதனைகள் நடந்து வருகின்றன.
தினகரன் வீட்டிலும் தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. தினகரன் வீட்டில் சோதனைகள் நடைபெற்று வரும் அதேவேளையில், தினகரனும் அவரின் மனைவியும் கோபூஜை நடத்தி, வழிபட்டார்கள்.
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ், வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ளது. ஏழெட்டு தியேட்டர்கள் கொண்ட ஜாஸ் சினிமாஸில்,
காலையில் இருந்தே ரெய்டு நடந்து வருகிறது. இதனால் இன்று படக்காட்சிகள் அனைத்தும் ஜாஸ் சினிமாஸில் ரத்து செய்யப்பட்டு உள்ளன.