

யோசுவா: கொரியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தப் போட்டி கொரியாவின் யோசுவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடியும், உலகத் தரவரிசையில் முதலாவது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் ஃபஜார் அல்பியன், முகமது ரியான் அர்டியான்டோ ஜோடியும் மோதின.
இதில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி 17-21, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் ஃபஜார் அல்பியன், முகமது ரியான் அர்டியான்டோ ஜோடியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியது.
முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் இந்தோனேசிய ஜோடியிடம் சாட்விக் - சிராக் ஷெட்டி ஜோடி இழந்தது. இருந்தபோதும் அடுத்த 2 செட்களிலும் சுதாரித்து விளையாடி வெற்றி பெற்று பட்டத்தை வென்றது இந்திய ஜோடி.
கொரியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் முதல்முறையாக சாட்விக்- சிராக் ஷெட்டி ஜோடி பட்டத்தை வென்றுள்ளது.
ஏற்கெனவே இதே ஆண்டில் இந்த ஜோடி, இந்தோனேசிய ஓபன், சுவிஸ் ஓபன் உட்பட 3 பட்டங்களை இந்திய ஜோடி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.