

கொழும்பு: வளர்ந்து வரும் வீரர்களுக்கான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றது. இதில் இந்திய ஏ அணியை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் ஏ அணி.
8 அணிகள் இந்த தொடரில் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் ‘குரூப் பி’-யில் இடம் பெற்றிருந்தன. லீக் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை இந்தியா ஏ வென்றது. இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கொழும்பு நகரில் உள்ள பிரேமதாச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான் என தொடக்க ஆட்டக்காரர்கள் 121 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த அணியின் பேட்ஸ்மேன் தயப் தாஹிர், 71 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா ஏ விரட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, 61 ரன்கள் எடுத்தார். கேப்டன் யஷ் துல் 39 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 29 ரன்கள் எடுத்தார். நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிய இந்தியா ஏ அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் ஏ அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் நிஷாந்த் சிந்து, தொடர் நாயகன் விருதை வென்றார்.