வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியை ‘டை’யில் முடித்தது இந்திய மகளிர் அணி

ஹர்மன்பிரீத் கவுர்
ஹர்மன்பிரீத் கவுர்
Updated on
2 min read

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டையில் முடித்தது. இதனால் ஒருநாள் போட்டி தொடருக்கான கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டன.

இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனையான ஃபர்கானா ஹோக் 160 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் வங்கதேச வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஃபர்கானா ஹோக்.

226 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி ஒரு கட்டத்தில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஸ்மிருதி மந்தனா 85 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து பஹிமா கதுன் பந்தில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 4, யாஷ்டிகா பாட்டியா 5, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களில் வெளியேறினர்.

54 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவையாக இருந்தன. 42-வது ஓவரின் போது சிறப்பாக விளையாடி வந்த ஹர்லீன் தியோல் 108 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதே ஓவரின் கடைசி பந்தில் தீப்தி சர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது.

அமன்ஜோத் கவுர் 10, ஸ்னே ராணா 0, தேவிகா வைத்யா 0 ரன்னில் நடையை கட்டினர். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் தேவையாக இருந்தன. ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேக்னா சிங் களத்தில் இருந்த நிலையில் 49-வது ஓவரில் 6 ரன்கள் சேர்க்கப்பட்டன. முர்பா அக்தர் வீசிய கடைசி ஓவரில் 3 ரன்களே தேவை என்ற நிலையில் முதல் இரு பந்துகளில் 2 ரன்கள் சேர்க்க ஸ்கோர் (225 ரன்கள்) சமநிலையை எட்டியது. அடுத்த பந்தில் மேக்னா சிங் (6), விக்கெட்கீப்பர் நிகர் சுல்தானாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 49.3 ஓவர்களில் இந்திய அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ஆட்டம் ’டை’ ஆனது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தனது கடைசி 6 விக்கெட்களை 34 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது 38-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 45 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்டாலும் ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.

பொதுவாக ஆட்டம் ‘டை’யில் முடிவடைந்தால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படு வழக்கம். ஆனால் போட்டியை நடத்துவதற்கான நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிவடைந்த தால் சூப்பர் ஓவர் அமல்படுத்தப்படாமல் போட்டி டையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததால் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன.

ஹர்மன்பிரீத் ஆதங்கம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறும்போது,“இந்த ஆட்டத்தில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். கிரிக்கெட்டுக்கு அற்பாற்பட்டு நடுவர்கள் நடந்து கொண்டது எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அடுத்த முறை நாங்கள் வங்கதேசத்திற்கு வரும்போது இந்த வகையான நடுவரைச் சமாளித்து அதற்கேற்ப எங்களை தயார்படுத்திக்கொள்வோம். நடுவர்கள் அளித்த சில முடிவுக
ளால் மிகவும் ஏமாற்றமடைந்துஉள்ளோம்” என்றார்.

கடைசி ஓவரின் 3-வது பந்தில் மேக்னா சிங் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். பந்து மட்டையை உரசாத நிலையில் நடுவர் அவுட் வழங்கியதால் மேக்னா சிங் கடும் அதிருப்தி அடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in