

மொனாக்கோ: மொனாக்கோ டைமண்ட் லீக்கில் இந்திய டிரிப்பிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
தேசிய சாதனையை தன்வசம் வைத்துள்ள டிரிப்பிள் ஜம்ப் வீரரான பிரவீன் சித்ரவேல் மொனாக்கோ டைமண்ட் லீக்கில் தனது 5-வது முயற்சியில் 16.59 மீட்டர் தாண்டி 6-வது இடம் பிடித்தார். அவரது தேசிய சாதனை 17.37 மீட்டர் ஆகும். மொனாக்கோ டைமண்ட் லீக்கில் பிரவீன் சித்ரவேல் வெளிப்படுத்திய செயல்திறன் இந்த சீசனில் அவரது மோசமான செயல்பாடாக அமைந்தது.
இந்த சீசனில் இதற்கு முன்னர் அவர், பங்கேற்ற 3 தொடர்களில் 17.07 மீட்டர், 17.17 மீட்டர், 17.37 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார். பர்கினாபேவை சேர்ந்த ஹியூஸ் ஃபேப்ரைஸ் ஜாங்கோ 17.70 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். ஜமைக்காவின் ஜெய்டன் ஹிப்பெர்ட் (17.66 மீட்டர்), அல்ஜீரியாவின் மொகமது டிரிகி (17.32 மீட்டர்) ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்தனர்.