

புதுடெல்லி: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவிலுள்ள ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதற்கிடையே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா (65 கிலோ), காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளித்து ஆசிய விளையாட்டு போட்டியில் நேரடியாக பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால குழு அனுமதி அளித்திருந்தது.
இந்த நேரடித் தகுதியை எதிர்த்து மல்யுத்த வீரரான அஜீத் கல்கால், அந்திம் பங்ஹால் ஆகியோர் சார்பில் கூட்டாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மறுத்ததோடு, மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.