Published : 22 Jul 2023 08:31 AM
Last Updated : 22 Jul 2023 08:31 AM
மெல்பர்ன்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. கனடா அணியின் பெனால்டி கிக்கை நைஜீரியா கோல்கீப்பர் சியாமகா நாடோசி அற்புதமாக தடுத்தார். இதனால் இந்த அணிகள் மோதிய ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது நாளான நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா - நைஜீரியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் மெல்பர்னில் நடைபெற்றது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
50-வது நிமிடத்தில் கனடா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கனடா அணியின் கிறிஸ்டின் சின்க்ளேரை பாக்ஸ் பகுதிக்குள் வைத்து நைஜீரியா வீராங்கனை பிரான்சிஸ்கா ஆர்டேகா ஃபவுல் செய்தார். பெனால்டி வாய்ப்பில் 40 வயதான கிறிஸ்டின் சின்க்ளேர் கோல் வலையின் இடது கார்னரை நோக்கி தாழ்வாக பந்தை உதைத்தார். ஆனால் அதை 22 வயதான நைஜீரியா அணியின் கோல்கீப்பர் சியாமகா நாடோசி அற்புதமாக பாய்ந்து ஒற்றை கையால் தட்டிவிட்டார்.
இதனால் ஒலிம்பிக் சாம்பியனான கனடா அதிர்ச்சியில் உறைந்தது. சர்வதேச போட்டிகளில் 190 கோல்கள் அடித்துள்ள கிறிஸ்டின் சின்க்ளேர், பெனால்டி கிக்கை கோலாக மாற்றத் தவறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஒருவேளை அவர், கோல் அடித்திருந்ததால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக வயதில் கோல் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்திருப்பார்.
இதன் பின்னர் கடைசி வரை போராடியும் கனடா அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. நைஜீரிய அணி வீராங்கனைகள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.
சுவிட்சர்லாந்து வெற்றி.. நியூஸிலாந்தின் டூனிடின் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 45-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ரமோனா பச்மேன் கோலாக மாற்ற முதல் பாதியில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 64-வது நிமிடத்தில் செரைனா பியூபெல் கோல் அடித்து அசத்தினார்.
இலக்கை நோக்கி கவும்பா சோவ் அடித்த பந்தை பிலிப்பைன்ஸ் கோல்கீப்பர் ஒலிவியா மெக்டேனியல் தட்டிவிட்டார். ஆனால் அதை அந்த அணி வீராங்கனைகள் விலக்கி விடுவதற்குள் சுதாரித்துக்கொண்ட செரைனா பியூபெல் நொடிப்பொழுதில் பந்தை கோல் வலைக்குள் தள்ளிவிட்டார்.
ஸ்பெயின் அசத்தல்: வெலிங்டன் ரீஜினல் மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் - கோஸ்டா ரிகா அணிகள் மோதின. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை எஸ்தர் கோன்சலஸ் இலக்கை நோக்கி உதைத்த பந்தை கோஸ்டா ரிகா வீராங்கனை வலேரியா டெல் காம்போ விலக்கிவிட முயன்றார். ஆனால் அது சுய கோலாக மாறியது. இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை வகித்தது. அடுத்த 6 நிமிடங்களில் ஸ்பெயின் அணி மேற்கொண்டு இரு கோல்களை அடித்து மிரட்டியது.
23-வது நிமிடத்தில் பாட்லே உதவியுடன் பந்தை பெற்ற அயிடனா பொன்மட்டி கோலாக மாற்ற ஸ்பெயின் அணி 2-0 என முன்னிலை பெற்றது. 27-வது நிமிடத்தில் ஜெனிபர் ஹெர்மோசோ இலக்கை நோக்கி பந்தை தலையால் முட்டினார். ஆனால் பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு திரும்பியது. அப்போது கோல்கம்பத்தின் அருகே நின்றே எஸ்தர் கோன்சலஸ், அக்ரோபாட்டிக் பாணியில் அற்புதமாக பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதன் பின்னர் பலமுறை ஸ்பெயிஸ் அணி இலக்கை நோக்கி படையெடுத்த போதிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயின் அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 46 முறை இலக்கை நோக்கி பந்தை உதைத்தது. 80 சதவீதம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. மேலும் எதிரணியின் பாக்ஸ் பகுதிக்குள் 117 முறை பந்தை கொண்டு சென்றது. மகளிர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது இல்லை. இந்த வகையில் இது சாதனையாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT