Published : 22 Jul 2023 09:22 AM
Last Updated : 22 Jul 2023 09:22 AM

ஆஷஸ் 4-வது டெஸ்ட் | 592 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி

ஜானி பேர்ஸ்டோ

மான்செஸ்டர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 592 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் அந்த அணி 275 ரன்கள் முன்னிலை பெற்றது.

மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்ரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 317ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி 182 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் விளாசினார்.

மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 1 ரன்னில் வெளியேறினார். மொயின் அலி 54, ஜோ ரூட் 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 14, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. 30வது அரை சதத்தை கடந்த பென் ஸ்டோக்ஸ் 74 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் போல்டானார்.

இதையடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ தொடக்கத்தில் நிதானமாக விளையாடினார். அதேவேளையில் மறுமுனையில் ஹாரி புரூக் மட்டையை சுழற்றினார். தனது 6வது அரை சதத்தை கடந்த ஹாரி புரூக் 100 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் ஹேசில்வுட் பந்தை டீப் பேக்வேர்டு ஸ்கொயர் திசையை நோக்கி சிக்ஸருக்கு விளாச முயன்றார். அப்போது எல்லைக் கோட்டுக்கு மிக நெருக்கமாக நின்றபடி மிட்செல் ஸ்டார்க் அற்புதமாக கேட்ச் செய்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் 0, மார்க் வுட் 6 ரன்களில் நடையை கட்டினர். விக்கெட்கள் சரிய தொடங்கியதால் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடினார். பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோரது பந்தில் சிக்ஸர் விளாசினார். மறுமுனையில் ஸ்டூவர்ட் பிராடு விரைவு கதியில் விளையாடி 7 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கினார்.

ஜானி பேர்ஸ்டோ சதத்தை நெருங்கிய நிலையில் கேமரூன் கிரீன் பந்தில் ஆண்டர்சன் (5) எல்பிடள்யூ ஆனார். இதனால் ஜானி பேர்ஸ்டோ சதத்தை நிறைவு செய்ய முடியாமல் போனது. முடிவில் இங்கிலாந்து அணி 107.4 ஓவர்களில் 592 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜானி பேர்ஸ்டோ 81 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஸ் ஹேசில்வுட் 5 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க்,கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. உஸ்மான் கவாஜா 18 ரன்னில் மார்க் வுட் பந்திலும், டேவிட் வார்னர் 28 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர். ஸ்மித் 17 ரன்களிலும், ஹெட் 1 ரன்னிலும் வெளியேறினர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 41 ஓவர்கள் விளையாடிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது.

சதம் பூர்த்தி செய்யாத 2-வது வீரர்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 99 ரன்களுடன் ஆட்டமிழக்கால் இருந்த 2-வது பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆவார். இதற்கு முன் 1995-ல் பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் 2 முறை 99 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் எம்ஜேகே ஸ்மித், ஜெஃப்ரி பாய்காட், மைக்கேல் ஆதர்டன் ஆகியோருடன் ஜானி பேர்ஸ்டோ இணைந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x