

சென்னை: எதிர்வரும் அக்டோபர் 15-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்நிலையில், அந்த நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் போட்டி நடைபெற உள்ள தேதியை ஒட்டி படுக்கை முன்பதிவு செய்ய ரசிகர்கள் மும்முரம் காட்டி வருவதாக தகவல். அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் நாளில் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களின் கட்டணங்கள் சுமார் 10 மடங்கு உயர்ந்துள்ளன. சாதாரண நாட்களில் அகமதாபாத்தில் உள்ள ஓட்டல்களில் ஒருநாள் தங்குவதற்கான அறை வாடகை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை இருக்கும். இது தற்போது ரூ.40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு சில ஓட்டல்களில் ரூ.1 லட்சம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
ஓட்டல் முன்பதிவு இணையதளமான booking.com-ன் படி, தற்போது டீலக்ஸ் அறை ஒன்றின் வாடகை ரூ.5,699 ஆகும். ஆனால், அதே ஹோட்டலில் அக்டோபர் 15-ம் தேதி ஒரு நாள் தங்க விரும்பினால் ரூ.71,999 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் நாட்களில் அங்குள்ள நட்சத்திர விடுதிகள் காலியாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதை சமாளிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள், நரேந்திர மோடி மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒருநாள் தங்குவதற்கான படுக்கை கட்டணம் குறித்து விசாரித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக முழு உடல் பரிசோதனை பேக்கேஜ் வைத்துள்ள மருத்துவமனைகளில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை தங்குவதற்கான கட்டணம் குறித்து கேட்கப்படுகிறதாம். மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாளர் ஒருவரும் தங்கலாம்.
“போட்டி நடைபெறும் நாட்களில் எங்கள் மருத்துவமனையில் தங்குவதற்கான படுக்கை கட்டணம் குறித்த அழைப்புகளை பெற்று வருகிறோம். எங்களிடம் முழு உடல் பரிசோதனை பேக்கேஜ் உள்ளது. இன்னும் பிற மருத்துவமனையிலும் இதே நிலை நீடிப்பதாக அறிந்து கொண்டோம். அதனால் வேறு சில மருத்துவ பரிசோதனை பேக்கேஜை கொண்டு வரும் யோசனையை முன்னெடுத்துள்ளோம்” என அகமதாபாத் நகரை சேர்ந்த மருத்துவர் நிகில் லாலா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 2-ம் தேதி ஆசியக் கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இலங்கையில் நடைபெறுகிறது.