Published : 21 Jul 2023 09:31 AM
Last Updated : 21 Jul 2023 09:31 AM
மான்செஸ்டர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடியது. ஸாக் கிராவ்லி சதம் அடித்தார்.
மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டுடிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ரேலிய அணிமுதல் நாள் ஆட்டத்தில் 83 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது. மிட்செல் ஸ்டார்க் 23, கேப்டன் பாட் கம்மின்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 90.2 ஓவர்களில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாட் கம்மின்ஸ் (1), ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோஸ் ஹேசில்வுட் 4 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் வெளியேறினார். மிட்செல் ஸ்டார்க் 93 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5, ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆண்டர்சன், மொயின் அலி, மார்க் வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. பென் டக்கெட் ஒரு ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அலெக்ஸ் கேரியிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். இதையடுத்து களமிறங்கிய மொயின் அலி, ஸாக் கிராவ்லியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். மொயின் அலி 82 பந்தில், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸாக் கிராவ்லி 93 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் தனது 4வது சதத்தை விளாசினார். ஜோ ரூட் உடன் இணைந்து 206 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். 182 பந்துகளில் 189 ரன்கள் எடுத்த கிராவ்லி, கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 21 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். 95 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த ரூட், ஹேசில்வுட் வேகத்தில் வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 384 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. அதன் மூலம் 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹாரி புரூக் 14 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Zak Crawley, that was some innings #EnglandCricket | #Ashes pic.twitter.com/npDizvvwNO— England Cricket (@englandcricket) July 20, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT