Published : 20 Jul 2023 08:16 AM
Last Updated : 20 Jul 2023 08:16 AM
போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் டொமினிகாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் இன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மோதுகிறது. இந்த ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதும்100-வது போட்டியாக அமைந்துள்ளது. சிறப்பு மிக்க இந்த போட்டியில் இந்திய அணி மீண்டும்ஒரு முறை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவதுடன் தொடரை முழுமையாக 2-0 என்ற கணக்கில் வெல்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
அஜிங்க்ய ரஹானே தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். இதேபோன்று 3வது வரிசையில் களமிறங்க தொடங்கிய ஷுப்மன் கில்லும் ரன்வேட்டை நிகழ்த்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.
முதல் டெஸ்டில் சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். விராட் கோலி, வெளிநாட்டு ஆடுகளங்களில் கடைசியாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சதம் அடித்திருந்தார். டொமினிகாடெஸ்டில் 76 ரன்கள் சேர்த்த அவர், அதனைமூன்று இலக்க ரன்களாக மாற்றத் தவறினார். எந்தவித அழுத்தமும் இல்லாததால் வெளிநாட்டு மண்ணில் தனது சதத்தின் வறட்சிக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைக்க விராட் கோலி முயற்சி செய்யக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்த வரையில்13 ஆண்டுகளில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ள ஜெயதேவ் உனத்கட்டுக்கு மீண்டும்வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம்தான். டொமினிகா டெஸ்டில் 9 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர், விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. சுழலில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.
போர்ட் ஆஃப் ஸ்பெயின் ஆடுகளம் சுழலுக்குசாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அக்சர் படேல் விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அவர், களமிறங்கும் பட்சத்தில் ஜெயதேவ் உனத்கட் அல்லது ஷர்துல் தாக்குர் நீக்கப்படக்கூடும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் வகையில் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கெவின் சின்க்ளேர் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரரான அலிக் அத்தானாஸை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அந்த அணியால் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
டெஸ்ட் போட்டிக்கே உரித்தான போராட்ட குணம் எந்த ஒருகட்டத்திலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் இருந்து வெளிப்படவில்லை. விரைவு கதியில் விளையாடி விக்கெட்களை பறிகொடுத்தனர். அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் அஸ்வின், ஜடேஜா சுழலை தாக்குப்பிடித்து சீராக ரன்கள் சேர்த்தால் மட்டுமே வலுவான போட்டியை கொடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT