Published : 20 Jul 2023 08:21 AM
Last Updated : 20 Jul 2023 08:21 AM

32 அணிகள் கலந்துகொள்ளும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்

உலகக் கோப்பை

ஆக்லாந்து: 32 அணிகள் கலந்து கொள்ளும் பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்து - நார்வே அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 9-வது பதிப்பை ஆஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து இணைந்து நடத்துகின்றன. இந்த கால்பந்து திருவிழா இன்று (20-ம் தேதி) தொடங்கி வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்துகின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

‘ஏ’ பிரிவில் நியூஸிலாந்து, நார்வே, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து அணிகளும் ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நைஜீரியா, கனடா அணிகளும் ‘சி’ பிரிவில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஸாம்பியா, ஜப்பான் அணிகளும் ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, ஹைதி, டென்மார்க், சீனா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

‘இ’ பிரிவில் நடப்பு சாம்பியன் அமெரிக்கா, வியட்நாம், நெதர்லாந்து, போர்ச்சுகல் அணிகளும், ‘எஃப்’ பிரிவில் பிரான்ஸ், ஜமைக்கா, பிரேசில், பனாமா அணிகளும் ‘ஜி’ பிரிவில் சுவீடன், சுவிட்சர்லாந்து, இத்தாலி, அர்ஜெண்டினா அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் ஜெர்மனி, மொராக்கோ, கொலம்பியா, தென் கொரியா அணிகளும் உள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி அதே பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த வகையில் 16 அணிகள் மோதும் நாக் அவுட் சுற்று ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் 8 அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். கால் இறுதி சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 11 மற்றும் 12-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. சாம்பியன் கோப்பையை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஆஸ்திரேலியாவில் உள்ள 6 மைதானங்களிலும், நியூஸிலாந்தில் உள்ள 4 மைதானங்களிலும் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மகளிர் கால்பந்து திருவிழாவின் தொடக்க நாளான இன்று முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து - நார்வே அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு நியூஸிலாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. நியூஸிலாந்து - நார்வே அணிகள் இதுவரை சர்வதேச கால்பந்து அரங்கில் 7 முறை மோதி உள்ளன. இதில் நார்வே 5 முறை வெற்றிபெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தை டிரா செய்தது. ஒரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த தோல்வி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி போட்டியில் கிடைக்கப்பெற்றதாகும்.

புகழ்மிக்க பாலோன் டி’ ஆர் விருதை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அடா ஹெகர்பெர்க், நார்வே அணியில் நட்சத்திர வீராங்கனையாக திகழ்கிறார். 76 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 43 கோல்கள் அடித்துள்ளார். அதேவேளையில் கிளப் மட்டத்தில் லயன் அணிக்காக விளையாடி வரும் அவர், சாம்பியன்ஸ் லீக்கில் 59 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பிற்பகல் 3.30 மணிக்கு சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா -அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலிய அணியில் சாம் கெர் நட்சத்திரவீராங்கனையாக உள்ளார். சர்வதேச போட்டிகளில் 63 கோல்கள் அடித்துள்ள சாம் கெர், சமீபத்தில்கிளப் மட்டத்தில் செல்சியா அணி மகளிருக்கான சூப்பர் லீக்கில் தொடர்ச்சியாக 4-வது முறையாக கோப்பையை வெல்ல உதவியாக இருந்தார். மேலும் அந்த அணி எஃப்ஏ கோப்பையை வென்றதிலும் சாம் கெர் முக்கிய பங்குவகித்தார்.

ஆஸ்திரேலிய அணி கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கப் ஆஃப் நேஷன்ஸ் தொடரில் ஜமைக்கா, ஸ்பெயின், செக்குடியரசு அணிகளை வீழ்த்தி பட்டம் வென்றது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துக்கு முன்னதாக இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 30 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் இருந்திருந்தது. இந்த சாதனைக்கு ஆஸ்திரேலிய அணி முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

இந்த வெற்றியை உலகக் கோப்பையிலும் தொடரச் செய்வதில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் முனைப்பு காட்டக்கூடும். முதன்முறையாக உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் அயர்லாந்து அணி கடும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். உலகக் கோப்பை தொடரின் அனைத்து ஆட்டங்களையும் தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஃபேன்கோடு செயலியிலும் போட்டிகளை காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x