Published : 20 Jul 2023 08:48 AM
Last Updated : 20 Jul 2023 08:48 AM
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 83 ரன்கள் தேவையாக உள்ளன. 131 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 48 ரன்கள் எடுத்தது.
காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ரன்களும் பாகிஸ்தான் அணி 461 ரன்களும் எடுத்தன. 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை 83.1 ஓவரில் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 186 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 82 ரன்களும், நிஷான் மதுஷ்கா 115 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், ரமேஷ் மெண்டிஸ் 79 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களும் சேர்த்தனர். திமுத் கருணரத்னே 20, குஷால் மெண்டிஸ் 18, ஏஞ்சலோ மேத்யூஸ் 7, தினேஷ் சந்திமால் 28, சதீராசமரவிக்ரமா 11, பிரபாத் ஜெயசூர்யா 10, கசன் ரஜிதா 5 ரன்களில் நடையை கட்டினர்.
பாகிஸ்தான் அணி சார்பில் நோமன் அலி, அப்ரார் அமகது ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் ஷாகீன் ஷா அப்ரீடி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 131 ரன்கள்இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 15 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 8,ஷான் மசூத் 7 ரன்களில் பிரபாத்ஜெயசூர்யா பந்தில் ஆட்டமிழந்தனர். நோமன் அலி (0), ரன் அவுட் ஆனார். இமாம் உல் ஹக் 25, கேப்டன் பாபர் அஸம் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் உள்ள நிலையில் வெற்றிக்கு மேற்கொண்டு 83 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்றுகடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT