

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிர்பூரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 78 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 88பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் சேர்த்தனர். ஸ்மிருதி மந்தனா 36, பிரியா பூனியா 7, யாஷ்டிகா பாட்டியா 15, ஹர்லீன் சர்மா 25 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேச அணி தரப்பில் சுல்தானா கதுன், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 229 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச மகளிர் அணி 35.1ஓவரில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஃபர்கானா ஹோக் 47, ரிது மோனி 27, முர்ஷிதா கதுடன் 12 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4, தேவிகா வைத்யா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்து. கடைசி ஆட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.