Last Updated : 03 Nov, 2017 08:27 PM

 

Published : 03 Nov 2017 08:27 PM
Last Updated : 03 Nov 2017 08:27 PM

விராட் கோலி முழு சுதந்திரம் அளிக்கிறார்: அக்சர் படேல் புகழாரம்

பந்து வீச்சில் இந்திய கேப்டன் விராட் கோலி முழு சுதந்திரம் அளிப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்று வரும் குறுகிய வடிவிலான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ளார். அதேவேளையில் அணியில் இடம் பிடித்துள்ள மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற 8 போட்டிகளில் 10 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். அதிலும் ரன்களை சிக்கனமாக வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் அக்சர் படேல், அந்த அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இந்நிலையில் ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது டி20 ஆட்டத்துக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

அணியில் எனக்கு இடம் கிடைத்துள்ளதால்தான் விளையாடுகிறேன். எந்த வீரருக்கும் மாற்றாக நான் தேர்வாகவில்லை. ஒரு ஆட்டத்தில் நான் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த ஆட்டத்துக்கு தானாகவே தேர்வாகி விடுவேன். ஒருநாள் போட்டித் தொடரில் நியூஸிலாந்து வீரர்கள் முதல் ஆட்டத்தில் ஸ்வீப் ஷாட்கள் மேற்கொண்டனர். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் இந்த திட்டத்தை கையாண்டதை அறிந்தோம்.

இதனால் எங்களது திட்டங்களை முறைப்படுத்தினோம். இதன்படி பந்து வீசம் கோணங்களில் மாற்றம் செய்தோம். இந்தத் தொடரில் நான் 2-வது ஒருநாள் போட்டியில் இருந்துதான் விளையாடும் லெவனில் இடம் பெற்று வருகிறேன். கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சில் நாம் விரும்பும் படி செயல்ட சுதந்திரம் அளிக்கிறார். என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையை நம்மிடமே விட்டுவிடுவார்.

திட்டம் வெற்றிகரமாக அமையவில்லை என்றாலும்கூட அவர், ஆதரவாக இருப்பார். இது பந்து வீச்சில் திறந்த மனதுடன் செயல்ட நம்பிக்கையை கொடுக்கும். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் எனது பந்து வீச்சு பாணி, அவரது பந்து வீச்சில் இருந்து வேறுபட்டது என்பதை அறிந்து வைத்துள்ளார். கிரிக்கெட் என்பது மனரீதியான விளையாட்டு, அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் என்னிடம், அவர் கூறுவார். சில குறிப்புகளையும் அவர் எனக்கு வழங்குவார்.

ரிஸ்ட் சுழற் பந்து வீச்சாளரின் பணி நடு ஓவர்களில் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து விக்கெட் வீழ்த்த முயற்சி செய்வதுதான்.

அதேவேளையில் விரல்களை கொண்டு பந்துகளை சுழலச் செய்யும் பந்து வீச்சாளர், ஒரு முனையில் இருந்து சீராக வீச வேண்டும். இரு முனைகளில் இருந்தும் நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் விக்கெட்கள் வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஐபிஎல் தொடர்களுக்கும், ரஞ்சி கோப்பைக்காகவும் அதிக ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். . இங்கு பந்துகள் அதிகம் சுழலாது, இவ்வாறு அக்சர் படேல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x