

நெஹ்ரா நியூஸிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் ஆடி ஓய்வு பெறுகிறார், இந்நிலையில் அவருடன் பல போட்டிகளில் இணைந்து பந்து வீசிய ஜாகீர் கான் நெஹ்ராவின் திறமை மற்றும் அவருடனான நட்பு பற்றி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் ஜாகீர் கான்.
இருவருமே சிறந்த சவாலான போட்டியாளர்கள், இருவரும் நண்பர்கள். 2003 உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களிலும் ஒருநாள் போட்டிகளிலும் எதிரணி பேட்ஸ்மென்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருவரும் திகழ்ந்தனர்.
இந்நிலையில் நெஹ்ரா பற்றி ஜாகீர் கான் கூறும்போது, “அவரது பந்து வீச்சு, வீசும் போது அவரது ஆக்சன், அவரது கடமை உணர்வு, ஆகியவை எனக்கு நிரம்பப் பிடிக்கும். ஒரு சகவீரராக அவர் சொத்துதான். அவர் இருந்தாலே உத்வேகம் பிறக்கும்.
நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். அவரது ஆலோசனை சில வேளைகளில் என்னை திடீர் எழுச்சியுறச்செய்து பந்து வீசியுள்ளேன். வாழ்க்கையாக இருந்தாலும் கிரிக்கெட்டாக இருந்தாலும் முன்னணியில் நிற்பார். எப்போதும் கடினமான சூழ்நிலையில் அவர் தன்னை அணுகக்கூடிய நபராகவே நடத்திக் கொண்டுள்ளார்.
சுயமரியாதை மிக்கவர், அவரது தன்னம்பிக்கை தொற்றுநோய் போல் அனைவருக்கும் பரவக்கூடியது என்பது அவரது பந்து வீச்சில் தெரியவரும்.
2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியப் போட்டியில் 23 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை அன்றைய தினம் ஊதினார். அந்தப் போட்டியில் அவர் ஆடுவது கூட சந்தேகமாக இருந்தது, காரணம் வலைப்பயிற்சியில் அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டு வீங்கியிருந்தது. உடற்தகுதிச் சோதனையைக் கடந்து வந்தார், அது எவ்வளவு பெரிய நன்மையை விளைவித்தது!
ஒரு தனிநபராக இங்கிலாந்து அணியை ஊதினார். அவர் பந்தின் வேகம், ஸ்விங், பவுன்ஸ், அனைத்தும் அதிசயிக்க வைத்தன. பந்துகள் பிட்ச் ஆன இடம், எவ்வளவு பெரிய பேட்ஸ்மனாக இருந்தாலும் ஆடியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது, ஆடினால் எட்ஜ் ஆகும். அதுதான் அன்று நடந்தது.
22 வயது வீச்சாளருக்குள் 38 வயது அனுபவசாலி இருந்து அன்று அவரை இயக்கியது. அவர் சிறந்த டெஸ்ட் பவுலராக திகழ்ந்திருப்பார். கூகபரா (ஆஸி., தெ.ஆ. வில் பயன்படுத்தப்படும் அகலமான தையல் உள்ள பந்து வகை) பந்தில் இவர் மற்றவர்களை விட நன்றாக வீசக்கூடியவர். பந்தை வலது கை பேட்ஸ்மன்களுக்கு உள்ளே கொண்டு வருவதில் நிபுணர்.
எங்கள் இருவருக்குமிடையே அணியில் போட்டி இருந்ததில்லை. இந்தியாவுக்காக போட்டிகளை வெல்வதே இருவரது இலக்காகவும் இருந்தது. நாங்கள் எப்போதும் ஆட்டம் பற்றியும், பல்வேறு ஆட்டச் சூழ்நிலைகள் குறித்து விவாதிப்போம். இன்னமும் கூட பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
விட்டுக் கொடுக்க முடியாத ஒரு நட்பில் இருவரும் இருந்து வருகிறோம். அவர் ஓய்வு பெறுகிறார், நான் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் இருவருக்குமே இது உணர்ச்சிகரமான தருணம். நாம் ஆஷிஷ் நெஹ்ராவின் அருமையான கிரிக்கெட் வாழ்வைக் கொண்டாடுவோம், என்றார் ஜாகீர் கான்.