

காமன்வெல்த் மல்யுத்தப் பிரிவில், இந்திய வீரர்கள் அதிரடியாக 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சுஷில்குமார், 75 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர், அமித்குமார் 57 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகாட் தங்கப்பதக்கம் வென்றார். 125 கிலோ எடைப்பிரிவில், ராஜீவ் தோமர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சுஷில் குமார், 4 சுற்றுகளிலும் எளிதாக வென்றார். இறுதிச் சுற்றில், பாகிஸ்தானைச் சேர்ந்த கவுமர் அப்பாஸுடன் (Qamar Abbas) மோதிய சுஷில், இரண்டு நிமிடங்களுக்குள், 8-0 என்ற வித்தியாசத்தில் வென்றார். இதேபோல, தனது பிரிவில் கடைசி சுற்றில் நைஜீரிய வீரரை சந்தித்த அமித்குமார், 6-2 என்ற கணக்கில் வென்றார். முதல் 4 சுற்றுகளை எளிதாக வென்ற அமித்குமாருக்கு, அடுத்த இரண்டு சுற்றுகளில் கடும் போட்டியாக நைஜிரீய வீரர் இருந்தார். இருப்பினும் முதல் 4 சுற்றுகளை வென்றதால், இந்தியாவுக்கு தங்கம் உறுதியானது.
125 கிலோ எடைப் பிரிவில் விளையாடிய ராஜீவ் தோமரால், தனது போட்டியாளரான கனடா வீரரை வீழ்த்த முடியாமல் போனது. இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கமே மிஞ்சியது.
மகளிர் மல்யுத்தப் போட்டியின், 48 கிலோ பிரிவில், இந்தியாவின் வினேஷ் போகாட், இங்கிலாந்தின் யானா ரட்டிகனை சந்தித்தார். முதல் சுற்றில் சற்று தடுமாறினாலும், அடுத்த சுற்றுகளில் திறம்பட விளையாடி 11-8 என்ற வித்தியாசத்தில் தங்கம் வென்றார்.
இவற்றோடு சேர்த்து, இந்த காமன்வெல்த் போட்டியில், இந்தியா இதுவரை மொத்தம் 36 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 10 தங்கம், 15 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.