Published : 21 Nov 2017 10:03 AM
Last Updated : 21 Nov 2017 10:03 AM

இந்தியா-இலங்கை டெஸ்ட்: சில துளிகள்

கோலியின் அதிவிரைவு 50-வது சதம்

முதல் 80 பந்துகளில் 50 ரன்களை எடுத்த விராட் கோலி, அடுத்த 54 ரன்களை 39 பந்துகளில் எடுத்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 18-வது சதத்தை எடுத்த விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 32 சதங்களை எடுத்ததால் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை எடுத்து சாதனை புரிந்தார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக அதிக சதங்கள் அடித்துள்ளவர்களின் பட்டியலில் விராட் கோலி 50 சதங்களுடன் 8-வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பாண்டிங் (71), சங்கக்கரா (63), ஜேக் காலிஸ் (62), ஜெயவர்தனே (54), ஹசிம் ஆம்லா (54), பிரையன் லாரா (53) ஆகியோர் முதல் 7 இடங்களில் உள்ளனர். மேலும் 50 சதங்களை விரைவாக கடந்தவர்களின் பட்டியலில் ஹசிம் ஆம்லாவுடன் சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார் கோலி. இருவரும் 348 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த பட்டியலில்சச்சின் (376 இன்னிங்ஸ்) 2-வது இடத்தில் உள்ளார்.

இந்த ஆண்டில் 9

விராட் கோலி இந்த ஆண்டில் மட்டும் 9 சதங்கள் விளாசி உள்ளார். ஒரு ஆண்டில் அவர் விளாசிய உள்ள அதிக சதங்களின் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னர் 2012 மற்றும் 2014-ல் தலா 8 சதங்கள் அடித்திருந்தார். ஈடன் கார்டன் மைதானத்தில் கோலி சதம் அடிப்பது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் அவர் இங்கு அதிகபட்சமாக 45 ரன்களே சேர்த்திருந்தார். விராட் கோலி நேற்று 72 ரன்கள் சேர்த்திருந்த போது எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் ரிவ்யூ செய்து ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார்.

முதல் கேப்டன்

முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2-வது இன்னிங்ஸில் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி அதன் பின்னர் 2-வது இன்னிங்ஸில் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.

புஜாரா சாதனை

டெஸ்ட் போட்டியில் 5 நாட்களும் பேட் செய்த 3-வது இந்திய வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார் சேதேஷ்வர் புஜாரா. இலங்கை அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 5 நாட்களும் அவர் பேட் செய்தார். கடைசி நாளான நேற்று அவர், 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு முன்னர் இந்திய வீரர்கள் எம்.எல்.ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரி ஆகியோர் 5 நாட்களும் பேட் செய்து சாதனை படைத்திருந்தனர்.

தற்போது அவர்களுடன் புஜாரவும் இணைந்துள்ளார். இவர்கள் 3 பேரும் இந்த சாதனையை ஈடன் கார்டன் மைதானத்தில் நிகழ்த்தி உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பம்சம். உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்தியவர்களின் பட்டியலில் புஜாரா 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெப்ஃரி பாய்காட், ஹிம் ஹியூஸ், ஆலன் லேம்ப் , அட்ரியன் கிரிபிஃத் , ஆன்ட்ரூ பிளிண்டாப், ஆல்விரோ பீட்டர்சன் ஆகியோரும் டெஸ்ட் போட்டியில் 5 நாட்கள் பேட் செய்துள்ளனர்.

கனவை தகர்த்த கோலி

இந்திய அணி ஜடேஜா விக்கெட்டை இழக்கும் போது ஸ்கோர் 249 ஆக இருந்தது. அப்போது 127 ரன்களே முன்னிலையாக இருந்தது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி களத்தில் நின்ற நிலையில், எதிர்முனையில் உள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்த இலங்கை திட்டமிட்டது. அவர்கள் எண்ணப்படி சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் விராட் கோலி சதம் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதனால் இந்திய அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க செய்ய நினைத்த இலங்கை அணியின் கனவு தகர்ந்தது.

திக்வெலா தந்திரம்

தோல்வியின் பிடியில் இலங்கை அணி சிக்கிய நிலையில் கடைசி கட்டத்தில் அந்த அணி வீரர்கள் நேரத்தை கடத்துவதில் கவனம் செலுத்தினர். ஷமி வீசிய 19-வது ஓவரில் நிரோஷன் திக்வெலா தேவையில்லாமல் இருமுறை கிரீஸை விட்டு வெளியே வந்தார். அதிலும் ஷமி பந்து வீசுவதற்காக ஓட்டத்தை தொடங்கியதும் திக்வெலா இதுபோன்று செயல்பட்டார். இதனால் ஷமி, திக்வெலாவிடம் வாக்குவாதம் செய்தார். கோலியும் ஷமியுடன் சேர்ந்து கொண்டார். இதையடுத்து நடுவர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்துவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x