

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, தான் பயிற்சி மேற்கொள்ளும் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காயம் காரணமாக சுமார் ஓராண்டு காலமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
29 வயதான பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 30 டெஸ்ட், 72 ஒருநாள் மற்றும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 319 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
உடல்நலம் குணமாகி அவர் மீண்டு வருகிறார். இந்த சூழலில் அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் அவரை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்ற வேளையில் களத்தில் பயிற்சி மேற்கொள்ளும் படத்தை பும்ரா வெளியிட்டுள்ளார்.
‘கம்மிங் ஹோம்’ என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து பந்து வீசுவது, த்ரோ அடிப்பது, மித ஓட்ட பயிற்சி மேற்கொள்வது போன்ற படங்களை அவர் வெளியிட்டுள்ளார். வரும் அக்டோபரில் இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அவர் விளையாடுவது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்.